ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாதவரை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இல்லை என்றால் அவர் எதிராக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால், பொருளாதார நெருக்கடிகளையும் தீர்க்க முடியாது என அவர் நாடாளுமன்றத்தில் நேற்று குறிப்பிட்டார்
கட்சி அரசியல் பாகுபாடின்றி அனைத்து மக்களும் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாக கூறிய அவர், பதவி விலகாமல் தீர்வு குறித்து பேசுவது அபத்தமானது எனவும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியல் தலைமைத்துவம் கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத், அதுவே பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனவும் கூறினார்
அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் அதற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து அரசாங்கம் தோற்கடிக்க வேண்டும்
அத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்
இந்தநிலையில் குற்றப்பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் இரண்டையும் ஆதரிக்க தாம் தயாராகவே இருப்பதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியக் கடன்களைப் பெறும்போது மூன்றாம் கட்சி ஒன்றின் மூலம் கடன்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்