நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து தெரிவித்த பதாதை ஒன்று காட்சிப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரவித்ததாவது,
“கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கட்சி பேதங்களைத் தாண்டி இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இது ஒரு கட்சி சார்ந்தோ, இன்னுமொரு கட்சிக்கு எதிராகவோ இடம்பெற்ற ஆர்ப்பாட்டமல்ல. ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு எழுந்த போராட்டம்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழரசு வாலிபர் முன்னணியினர் கலந்து கொண்டனர் என்பதற்காக சுயமாக இடம்பெற்ற இளைஞர்களின் போராட்டத்தைக் கட்சி சார்ந்து கொச்சைப்படுத்துவதும், முகநூல் பதிவுகளை இடுவதும் நாகரிகமான செயற்பாடு அல்ல.
அன்றைய ஆர்ப்பாட்டமானது இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சந்திரகாந்தன் அவர்களின் அலுவலகத்தின் முன்னாள் நிறைவுற்றது.
இது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதென்றும், குடிபோதையில் இளைஞர்கள் வந்தார்கள் என்றும் அன்று நடந்த அமைதியான போராட்டத்தினை இழிவாக்க முற்படுகின்றனர்.
இப்பேராட்டம் அங்கு சென்றதன் நோக்கம் இந்த அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமிடல் தவறானது என்பதை அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்திருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சுயமாகச் செயற்படப் போவதாக அறிவித்து அரசாங்கத்தின் தவறான நடைமுறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தனர்.அவ்வாறு எமது மாவட்ட உறுப்பினர்களும் செய்ய வேண்டும் என்பதை விலியுறுத்தும் முகமாகவே அங்கு செல்லப்பட்டது.
தெற்கில் இடம்பெறுவது போன்று அமைச்சர்களின், ஆளும் அரசின் பங்காளிகளின் இல்லங்களைத் தாக்குவது போன்ற செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு இளைஞர்கள் முன்நிற்கமாட்டார்கள்.மிகவும் அமைதியாக தங்கள் கருத்தினை வெளிப்படுத்தி அன்றைய போராட்டத்தினை நிறைவு செய்தார்கள்.
விமர்சிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. போராட்டத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் கட்சிகளின் இளைஞர்களும் கூட அன்றைய அப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.
வெறுமனே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தங்கள் எஜமானர்கள் எது செய்தாலும் தலையை ஆட்டி தங்கள் விசுவாத்தைக் காட்டுவது போல மட்டக்களப்பு இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதை மிக உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு இன்றைய தினம் எமது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் புகைப்படத்தினையிட்டு அவருக்கு நிதி அமைச்சப் பதவி கிடைத்துள்ளதாகவும், அதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் பதாதை இடப்பட்டிருக்கின்றது.
அவ்வாறான எதுவித பதாதைகளையும் இலங்கைத் தமிழ அரசக் கட்சி வெளிப்படுத்தவில்லை. எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஒரு தீர்வு வரும் வரையில் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதும் இல்லை.
அதுவும் எமது மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கிய இந்த அரசாங்கத்தின் கீழ் எதுவித பதவிகளையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.வேண்டுமென்றே போலியான விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் உச்சத்தின் வெளிப்பாடாக அனைத்து மக்களும் இந்த அரசுகளுக்கு எதிராகவும் ஒட்டு அரசியல் குழுக்களுக்கு எதிராகவும், போராட துணிந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் அரசோடு ஒட்டி இருப்பவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களைத் திசை திருப்பும் முயற்சியாகவே பார்ப்பதோடு இதனை தமிழ் மக்கள் அலட்டி கொள்ளத் தேவையில்லை.
போராட்டம் என்பது எங்களுக்கப் புதிய விடயம் அல்ல. அதில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதென்பதும் புதிதான விடயம் அல்ல. எமது மக்களுக்கான போராட்டத்தில் மக்களோடு, மக்களுக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி என்றும் களம் காணும்.
இவ்வாறான போலிகளை கண்டு ஏமாறவும்,தங்கள் எஜமானர்களின் மீதான விசுவாத்தினை வெளிப்படுத்த மக்களின் போராட்டதினை திசைதிருப்பும் கருத்துக்களை விமர்சனங்களாக முன்வைப்பதனை நம்பிவிடவும் இன்னமும் மக்கள் தயாரில்லை என்பது நிதர்சனம்.
இவ்வாறான போலிப் பதாதைகள் அடிக்கும் பணத்தில் அல்லலுறும் மக்களில் ஒரு குடும்பத்திற்காகவது அல்லது தங்கள் கட்சி உறுப்பினர்களின் குடும்பம் ஒன்றிற்காவது ஏதாவது உதவியினைச் செய்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.