தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியலமைப்பில் அவசரத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று இலங்கையின் பிரபல சட்டத்தரணிகளான பிசி ரொமேஸ்டி சில்வா மற்றும் மனோகர டி சில்வா ஆகியோர், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ரொமேஸ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு, அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கோரப்பட்ட அரசியலமைப்பு வரைவை அண்மையில் இறுதி செய்தது.
இந்தநிலையில் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையொன்றை புதிய திருத்தம் இன்றி அமைக்க முடியாது என அவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தாம்,முன்மொழிந்த திருத்தத்தை பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், தேசிய பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான தற்போதைய முயற்சிகள் தோல்வியடையக்கூடும் என்று இரண்டு சட்ட நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தவிர்ந்த அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலகி ஒரு வாரமாகியும் அமைச்சரவையை இறுதி செய்ய ஜனாதிபதியால் முடியவில்லை
இதனையடுத்தே புதிய ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.