இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஆலையடிவேம்பு பிரதான வீதி டயக்கோணியா முன்பள்ளி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாளரின் பேரக் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் உறவினர்கள் சென்று தங்கியிருந்து பிறந்த நாள் கொண்டாடுவதற்காக வீட்டை அலங்காரம் மற்றும் பிறந்தநாள் கேக் செய்யும் நடவடிக்கையில் சம்பவதினமான நேற்று இரவு ஈடுபாடிருந்துள்ளனர்.
பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு உறவினர்கள் தமது தாலிக்கொடி மற்றும் தங்க ஆபரணங்களைக் கழற்றி அறையின் அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு அருகிலுள்ள அறையில் எல்லோரும் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னர் பூட்டியிருந்த குறித்த வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கு நித்திரையிலிருந்தவர்களது அறையின் கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்த அடுத்த அறையின் அலமாரியிலிருந்த 3 தாலிக் கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதிகாலை 6 மணிக்கு நித்திரையிலிருந்து எழும்பியபோது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிய வந்ததையடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து அம்பாறையில் இருந்து தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று மற்றும் கோளாவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.