ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தான் சென்றாலும் மக்கள் தன்னை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் தோற்றத்தை ஏற்படுத்த கூடாது என்பதால், தான் அதில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலொன்றை பெற அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நாட்டில் நீங்கள் நல்லதொரு கனவாகும். நீங்களே இந்த நாட்டை கட்டியெழுப்புவீர்கள். உங்களது புரட்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்.
நான் ஒரு அரசியல்வாதி தான். நான் தொழில் புரிந்து நல்லதொரு நிலைக்கு வந்த பின்னர் நாடு மீது கொண்ட உணர்வினாலேயே அரசியலுக்கு வந்தேன். எப்போதாவது இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு என்னுடைய பங்களிப்பினை வழங்குவதே எனது நோக்கமாகும்.
தற்போது எமது இளைய பரம்பரையினர் மேற்கொள்கின்ற புரட்சிக்கு ஒரு சொல்லிலாவது என்னுடைய பங்களிப்பினை வழங்குவதற்கு முன்பதாக நான் இதனை சொன்னது, “நீயும் அந்த 225 பேரில் ஒருவன் தானே?” என அவர்கள் கேட்பதனாலேயே ஆகும்.
அவ்வாறு கேட்டாலும் பரவாயில்லை. நான் என்னுடைய கருத்தை வெளியிடுகின்றேன். கட்சி, நிற பேதமின்றி இந்த புரட்சிக்கு நான் இதயபூர்வமாக எனது ஒத்துழைப்பை வழங்குகின்றேன்.
அதற்காக நான் முன்நிற்கின்றேன். எனினும், அதற்காக எவ்விதத்திலும் கூட அரசியல் சாயம் பூசாதிருப்பதற்காக வேண்டி, அரசியல் சாயம் பூசப்பட்டுள்ள நான் ஒருபோதும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்து கொள்ள மாட்டேன்.
வந்தால் இளைஞர்கள் என்னை விரட்டி விடவும் கூடும். அவ்வாறானதொரு பலம் இளைய பரம்பரையினருக்கு கிடைத்திருப்பதையிட்டு நான் சந்தோஷம் அடைகின்றேன்.
தொழில் ஒன்றை பெற, மண்வெட்டி ஒன்றை பெற, கூரை தகடொன்றை பெற தமது வாழ்க்கையையே காட்டிக் கொடுக்கும் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் மக்கள் இருந்த நாட்டில் இவ்வாறான முதுகெலும்புள்ள இளைஞர் பரம்பரையொன்று உருவாகி இருப்பது தொடர்பில் நான் சந்தோஷம் அடைகின்றேன்.
பாமரர்களாகவன்றி திறந்த மனதுடன் முன்னோக்கி எண்ணுகின்ற, இன, மத, மொழி பேதமின்றி நாடு தொடர்பில் உண்மையாக பார்க்கின்ற நீங்கள் நாட்டுக்கே ஒரு பலமாகும். உங்களுடைய புரட்சிக்கு வெற்றி பெறட்டும். இது என்னுடைய கருத்தாகும். நான் அரசியல்வாதி என்பதால் என்னையும் ஏசுங்கள். பரவாயில்லை என ஹர்ச டி சில்வா தனது பதிவில் கூறியுள்ளார்.