ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக 250 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய தினமும் இதே எண்ணிக்கையிலான அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அரச புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் விசேட பணியகம், மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நுகேகொட புலனாய்வு கண்காணிப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு தகவல்களை திரட்டி வரும் நுகேகொட புலனாய்வு பிரிவின் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கலகம் அடக்குவதற்கான ஹெல்மெட்களுடன் கல்கிஸ்ஸ, களனி, நுகேகொட, கொழும்பு வடக்கு, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் பாணந்துறை பிரிவுகளில் இருந்தும் பல பொலிஸ் படையணிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மோசடி விசாரணை மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.