வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை நீக்குமாறும் இதன்மூலம் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துகின்றோம்.”, என்று பிரித்தானிய தமிழர் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில்,
“இலங்கையில் பாதுகாப்புத்துறைக்கு மிகையான நிதி செலவிடப்படுவதை ஏற்கமுடியாது. இது நாடு ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துவதாக உள்ளது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானம் செலுத்தவேண்டும்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இராணுவத்துக்கு செலவிடப்பட்ட நிதியானது, ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் செலவிடப்பட்ட நிதியை விஞ்சுவதாக அமைந்துள்ளது.
ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் 14. 92 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்ட அரசாங்கம், போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 10 வருடகாலத்தில் (2010 – 2019) 17. 28 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருக்கின்றது. இதேபோன்று 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு எனப் பெருந்தொகையான நிதி (12.3 சதவீதம்) ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை நீக்குமாறும் இதன்மூலம் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி தேசிய செலவுகளை குறைப்பதன் முதல்கட்டமாக அநாவசியமான இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றுள்ளது.