அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் போராடி வரும் இளைஞர், யுவதிகளை பேச வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக ‘கோட்டா கோ கம’ என்ற போராட்டக்களத்தை அமைத்துள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் அவர்களுடன் பேசத் தயாராகவுள்ளார் என்றும் அவர்களை பேச்சுக்கு வருமாறும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், நேற்று மாலை போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சமல், பஸில், நாமல், ஷசீந்திர, நிபுண ரணவ்கக ஆகிய அனைத்து ராஜபக்ஷக்களும் அரசாங்கத்தை விடடு விலகும்வரை நாம் பேசத் தயாரில்லை”, என்று தெரிவித்துள்ளனர்.
இந்த இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்வரை கோட்டா கோ கம போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.