நாட்டில் நடைபெற்றுவரும் அமைதிவழி போராட்டங்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தும் ஆயத்தங்கள் எவையும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போராட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பினை பாதுகாப்பதற்காகவும் அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் அமைதி
மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கும் பொலிஸார் ஒத்துழைப்பினை கோரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் இராணுத்தினரின் உதவி வழங்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியாகப் போராடுபவர்கள் மத்தியில் புலனாய்வு பிரிவினரை அனுப்பி, ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி அல்லது குண்டுத் தாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு திட்டமுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாகவும் அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முப்படையினர் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அன்பு கொண்ட தார்மீக பொறுப்புள்ளவர்கள் எனவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டங்களின்போது, பொது சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.