இரண்டு மில்லியன் டொலர் வழங்கப்பட்டே அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது- நளின் பண்டார.

இரண்டு மில்லியன் டொலரை கொடுத்து அமைச்சுப் பதவிகளை வழங்கியே அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வு இன்று (19) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சஹ்ரான் காசிமுக்கு வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் கதைக்கப்பட்டது. உண்மையில் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே இதுவரை தெரிந்துக்கொண்டிருந்தோம்.

நேற்றைய தினம் புதிய வலுசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டார். இன்று காலை பெற்றோல், டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியின் காலத்தில் 2 ரூபாயால் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டபோது துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.

ஆனால் எம்மால் துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றத்துக்கு வரமுடியாது. வேறு விதமாகவே பாராளுமன்றத்துக்கு வரமுடியும்.

விமல் வீரவன்ச நேற்று, நேற்று முன்தினம் மிக முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டார். அதாவது, அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்வதற்கான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக விமல் வீரவன்ச முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களாக நேற்று நியமிக்கப்பட்ட சிலருக்கு 2 மில்லியன் டொலர் வழங்கப்பட்டு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இன்று மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லை. மருந்துகள் இல்லாமல் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது உண்மையில் படுகொலையாகும். படுகொலை செய்யும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. படுகொலை செய்யும் அரசாங்கம் மருந்துகளை கொண்டுவருவதற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.

தங்களது ஆட்சிபலத்தை தக்க வைப்பதற்கு 2 மில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்துள்ளது. ஐந்து பேருக்கு இவ்வாறு 2 மில்லியன் டொலர் கையளித்தே அரசாங்கத்தை பாதுகாத்துக்கொண்டுள்ளன் என்பதை நேரடியாகவே எம்மால் கூற முடியும்.

மருந்துகள் இல்லாமல் எமது, தாய், தந்தையரை படுகொலை செய்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஒன்றிணையுமாறே நான் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

கோட்டா கோ ஹோம் மட்டுமல்ல படுகொலை செய்யும் ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை நான் பயமின்றி கூறுகின்றேன்.

Recommended For You

About the Author: Editor Elukainews