இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை – ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 10ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ரம்புக்கனை ரயில் வீதியை மறித்து இன்று காலை முதல் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கோரிய போதிலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ரம்புக்கனை பகுதிக்கு சென்ற டீசல் பவுசர் ஒன்றை வழிமறித்த போராட்டக்காரர்கள், அதனை தீ வைக்க முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும், பல சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில், போலீஸாரினால் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
கண்ணீர் புகை பிரயோகத்தை அடுத்து, போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், போலீஸாரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் பலர் காயமடைந்து, கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்த போலீஸ் உத்தியோகத்தர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் போலீஸார் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.