நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத் தன்மையுள்ள மற்றும் நாட்டுக்கு, மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரசமைப்பின் புதிய திருத்தத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தி உறுதி பூண்டுள்ளது.
இதன் பிரகாரமே அரசமைப்புத் திருத்த முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம், 20 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல ஜனநாயகப் பண்புகளைக் குறித்த வரைவு கொண்டுள்ளது.
புதிய நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட இந்த ஜனநாயகத் திருத்தங்களுக்குச் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.