முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நேற்று (20) மூவரையும் இன்று (21) மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வயோதிப தம்பதிகளை காயப்படுத்திவிட்டு தாலியினை கொள்ளையடித்து சென்றுள்ளமை மற்றும் விசுவமடு பகுதியில் செயின் அறுப்பு, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நகை கொள்ளை மற்றும் வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற கொள்ளைக்கும்பல் ஒன்றினை பெலிஸார் கைது செய்துள்ளனர்.
இளம் வயதினையுடைய கொள்ளைக்கும்பலை சேர்ந்தவர்கள் வாள் கொண்டு தனிமையில் வீடுகளில் இருக்கும் வயோதிபர்களை அடையாளம் கண்டு மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் முழங்காவில் பகுதியினை சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியினை சேர்ந்த ஒருவரும், மற்றையவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடிவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனையினை மேற்கொண்ட பெண் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சான்றுபொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.