சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34) மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,இறுதி நேரத்தில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மரண தண்டனை திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
42.72 கிராம் ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கமைய,நவம்பர் 10 ஆம் திகதி அவருக்கான மரண தண்டனை திட்டமிடப்பட்ட நிலையில்,அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
மரண தண்டனை தொடர்பிலான விசாரணைக்கு நீதிமன்றில் இருந்து அழைத்து செல்லப்பட்ட பின்னர் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
குற்றவாளிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மரண தண்டனையை நிறைவேற்றுவது சரியல்ல எனக் கூறப்பட்ட நிலையில், மரண தண்டனைக்கு எதிரான விசாரணையை பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது சமூக வலைதளங்களில் பரவியதால், அவரை தூக்கிலிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாகேந்திரனின் இறுதி மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.