தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து சுருட்டிய பணமும் நகைகளுமே ராஜபக்ஸக்களின் பண பலத்திற்கு காரணம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியிருக்கின்றார்.
யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்கள் உடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களை சந்தித்தபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், மக்கள் யாரை அறுதிப் பெரும்பாண்மையோடு பதவிக்கு கொண்டு வந்தார்களோ அதே மக்கள் அவர்களை பதவிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
ஆகவே இன்று தோல்வியடைந்த ஒரு ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமுமே ஆசனங்களில் இருக்கின்றது. இதற்கு பின்னர் அவர்கள் சட்டரீதியாக தங்கள் பதவிகளை துறக்கவேண்டும்.
இது இந்த நாட்டு மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகவுள்ளது. அதில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் கிடையாது. இவர்கள் இந்த நாட்டினுடைய சொத்துக்களை முடக்கி இந்த நாட்டு மக்களை தெருவுக்கு கொண்டு வந்து
பொருளாதார ரீதியாக மக்களை அவல நிலைக்குள் தள்ளியுள்ளார்கள். இவர்கள் இனியும் பதவியில் இருக்கக்கூடாது. காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். வடகிழக்கிலும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துகிறார்கள்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தலைவர்கள் வைத்திருக்கின்ற சொத்து விபரங்களை உலகம் திரட்டி வைத்திருக்கின்ற நிலையில் அதிலும் குறிப்பாக கடந்த 30 ஆண்டு கால யுத்த காலப்பகுதியில் ராஜபக்ச குடும்பம் வாரிச் சுருட்டிய சொத்துக்கள் .
2008 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணங்கள் விடுதலைப் புலிகளுடைய சொத்துக்கள் விடுதலைப் புலிகளுடைய வெளிநாட்டு சொத்துக்கள் போன்றவற்றை அபகரித்து
வெளிநாடுகளில் முதலீடு செய்கின்ற ராஜபக்ச குடும்பத்தின் உடைய சொத்து விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனைவிட இலங்கையினுடைய நிலங்களையும் வளங்களையும் விற்பனை செய்து
சொத்துக்களை அபகரித்து இலங்கையிலே இருக்கின்ற அனைத்து சமூகங்களையும் குறிப்பாக சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை தெருவுக்குக் கொண்டு வந்து தன்னுடைய குடும்பத்தை பணத்தால் பெருக்கி வைத்திருக்கக் கூடிய ராஜபக்ஸக்கள் மீது
ஹக்கஸ் என்று சொல்லப்படுகின்ற இணைய ஊடுருவிகள் ராஜபக்ஸக்களையும் இலக்கு வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் சில உண்மைத் தன்மையான விவரங்களோடு செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆகவே நான் நினைக்கின்றேன் இன்னும் ஒரு சில வாரங்களில் இது முழுமையாக வெளிவந்த பின்னர் அவர்களே அதற்குரிய விடைகளை முன்வைப்பார்கள் ராஜபக்சக்களே தங்களது அனைத்துக் கொள்ளைகளையும் வெளியிடுவார்கள்.
சீனியில் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், பாம் ஒயிலிலே எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், நிலங்களை விற்று எவ்வளவு கொள்ளை அடித்தார்கள், விடுதலைப் புலிகளின் எவ்வளவு சொத்துக்களை கொள்ளையடித்தார்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.