இலங்கையில் அடுத்த புதிய பிரதமரை நியமிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் கூடியது.
குறித்த கூட்டமானது நேற்றைய தினம் (25-04-2022) இடம்பெற்றுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிபாகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பிரதமர் பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க குழு தீர்மானித்துள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சிகளாலும் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வோம்.
நாட்டின் புதிய பிரதமர் யார் என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கலந்துரையாடி தீர்மானிக்கும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கும் போது “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை.
எவ்வாறாயினும், அவர் பங்கேற்புடன் எந்தவொரு இடைக்கால அரசாங்கத்திலும் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். அதன்படி புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.