அமைச்சரவைக்கு கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தல்! –

இலங்கைக்கு சொந்தமான விமான நிறுவனத்திற்கு 2022-2025 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்கு தேவையான 21 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யும் யோசனையை மூன்று மாதங்களுக்கு பிற்போடுமாறு அரசாங்க பொறுப்பு மற்றும் முயற்சிகள் தொடர்பான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்வது தொடர்பில் விளக்கப்படுத்தலுக்காக எயார்லைன் நிறுவனம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள கோப் குழுவில் முன்னிலையானது.

தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் குறித்த யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொள்முதல் வழிகாட்டலை உரிய முறையில் தயாரித்தல் மற்றும் தொடர்புடைய கொள்முதல் செயற்முறையை அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை அமைச்சரவை தீர்மானமாக முன்னெடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

விமானங்களின் சேவை காலம் நிறைவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

இருப்பினும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையினை கருத்திற்கொண்டு ஏனைய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் எனவும் கோப்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் தற்போது சேவையில் உள்ள 24 விமானங்களின் எண்ணிக்கை இன்னும் சில காலத்துடன் வரையறுக்கப்படும்.

விமானங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விளம்பரங்களை பிரசுரித்ததாக ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே கோப் குழுவில் குறிப்பிட்டார்.

அத்துடன் சந்தை நிலைவரங்களை கருத்திற்கொண்டு இந்த செயன்முறையை முன்னெடுக்க 6 தொடக்கம் 12 மாதம் வரையிலான காலம் தேவைப்படும் அத்துடன் இக்கொள்முதல் அமைச்சின் ஊடாக வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews