இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது -மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் சில தரப்பினர் முயற்சிப்பது அதிர்ச்சியைக்கொடுக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்குள் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்வதும், அதற்குப் புறம்பாக புதிய கட்டமைப்புக்களை உருவாக்குவதும் நீதிக்கான மக்களுடைய போராட்டத்துக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஈழத்தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக சிங்கள இனவாத அரசாங்கம் தொடுத்த கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சத்தைத் தொட்டது. மக்கள் கொத்துக்கொத்தாக கொடூரமாகக் கொல்லப்பட்டதை நினைவுகூர்வதில் கூட அரசியல் முன்னிற்பது நீதியைக் கோரிப் போராடும் உறவுகளுக்கு அதிர்ச்சியைக்கொடுத்திருக்கின் றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூர்வதென்பது – நீதிக்கான போராட்டமாகவும், சிங்கள – பௌத்த அரசுகளின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தைக் கோருவதற்கான ஒரு தினமாகவும் அமையவேண்டும்.
தமிழர்கள் ஒரு இன அடையாளத்தைக்கொண்டவர்கள் என்பதற்காக இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட் டனர். காணாமலாக்கப்பட்டார்கள். சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர் . தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இவை அனைத்தினதும் உச்சகட்டமாகத்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நோக்கப்படுகின்றது. இனப்படுகொலைக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று சர்வதேச ரீதியாகவே வலுவடைந்துவருகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் தெளிவான சில செய்திகளை ஈழத் தமிழர்கள் சொல்லவேண்டியிருக்கின்றது.
இனப்படுகொலை ஒன்று இங்கு இடம்பெற்றிருக்கின்றது என்பதும், அதற்கான நீதி இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதும் இதன்மூலம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். இனப்படுகொலைக்கான நீதி வழங்கப்படுவதன் மூலமாக மட்டுமே தமிழ் மக்களுடைய எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்த முடியும்.
மே 18 ஆம் திகதியை நினைவுகூர்வதற்காக முள்ளிவாய்;க்கால் பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அது வெளியிட்ட பிரகடனத்திலும் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நான்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
1. முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டி இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த..
2. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர்கள் சார்பில் கோர…
3. தமிழர் இன அடையாள இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனப்படுகொலையைத் தடுக்க..
4. தமிழர் சமூக அமைப்புக்களை பலப்படுத்தி விடுதலைக்காக முனைப்புடன் உழைக்க…
மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நான்கு வருடங்களுக்கு முன்னதாக 2018 மே 18 இல் வெளியிடப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிரகடனமாக இது அமைந்துள்ளது.
இரண்டு பக்கங்களிலும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என சர்வதேச சமூகம் சொல்லிக்கொள்ள முற்படும் நிலையில் எமது கோரிக்கை பலவீனப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனைப் புரிந்துகொண்டு எம்மிடையே உள்ள முரண்பாடுகளைத் தவிர்த்து – அரசியல் தலையீடுகளை புறமொதுக்கி எமது கோரிக்கையை நாம் பலமாக முன்வைக்க வேண்டும். இதனை மக்களின் கோரிக்கையான முன்னெடுப்பதன் மூலமாகவே இதற்கு வலுச்சேர்க்க முடியும். சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெறமுடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழ்த் தேசிய கட்சிகளாகவும் கூட்டுகளாகவும் முன்னணிகளாகவும் தம்மை அடையாளப்படுத்தியுள்ள வடக்கு-கிழக்கின் 13 ஆசனங்களைக் கொண்ட மூன்று அணியினரும் ஒன்றிணைந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தபோது, அதிலே இன அழிப்புக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறலையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புகளும் கோரியிருந்தார்கள். ஆகவே, இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை முதன்மைப்படுத்தும் அனைத்துத் தரப்புகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தகுதிபெற்றவர்களே. இருந்தபோதும், மூன்று வேறான அணிகளாக இவர்கள் பிரிந்திருப்பதால், ஈழத்தமிழ்த்தேசியத் தரப்பாக அரசியற் கட்சிகள் நினைவேந்தலைத் தலைமையேற்று நடத்தும் தகைமையை இழந்துள்ளார்கள். இதனாலேயே, மக்கள் தளத்தில் உள்ள ஒரு பொதுக்கட்டமைப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக்கட்டமைப்பு ஒன்றுள்ள நிலையில், புதிய கட்டமைப்புக்களை உருவாக்க முயற்சிப்பது எம்மை மேலும் பலவீனப்படுத்துவதற்கே உதவும். பொதுக்கட்டமைப்பில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அதனை ஜனநாயக முறைப்படி திருத்திக்கொள்வதே சரியானது.
ஆனால், இந்தத் தினத்தை தமது குறுகிய – சுயநல அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வட்டுவாகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 13 ஆவது திருத்தத்தை நிராகரிக்கின்ற சிவில் அமைப்புக்களே நினைவேந்தலை முன்னெடுக்கத் தகுதியுள்ளவர்கள் என்பதாக முன்னணியின் சார்பில் அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
13 ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ கொள்ள முடியாது என்ற நிலைப்பாடு மிகவும் பொருத்தமான ஒன்றே. அது கட்சிசார்பான ஒரு நிலைப்பாடு அல்ல. ஈழத்தமிழ்த் தேசிய நிலைப்பாடாகவே 2009 மே மாதம் வரை அந்த நிலைப்பாடு இருந்துவந்துள்ளது.
இருந்தபோதும், 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிச்சக்திகளால் தூண்டப்பட்டு 13 ஆம் திருத்தத்தை ஆரம்பப்புள்ளியாகக் கோருவோருக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தகுதி இல்லை என்று வாதிடுவது அவர்களின் 2009 வரையான பங்கேற்பையும் பயணத்தையும் உணர்வுரீதியாகக் காயப்படுத்தும் ஒரு செயற்பாடு ஆகிவிடும்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கென பொதுக்கட்டமைப்பு ஒன்று இருக்கும் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் – தனது சுயநல அரசியலுக்காக இதனை ஏற்பாடு செய்திருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது முள்ளிவாய்க்காலில் படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூருவதற்காகவும், அவர்களுக்கான சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான கோரிக்கையை வலுப்படுத்துவதற்காகவும் உள்ள ஒரு தினமாகும். இதற்குள் 13 ஆவது திருத்த எதிர்ப்பை மாத்திரம் ஒரு நிபந்தனையாக உட்புகுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். தமது கட்சி அரசியலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் உட்புகுத்த முன்னணியினர் செய்யும் ஒரு கீழ்த்தரமான தந்திரமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
அரசியலமைப்பின் 6 ஆம் சட்டத்திருத்தத்தின் கட்டுக்குள் செல்ல மறுத்து, சரணாகதி அரசியலுக்கு உள்ளாகாது இறுதிமூச்சுவரை போராடியவர்களை நினைவு கூருகையில், அந்தச் சட்டத்திருத்தத்தையும் அடக்குமுறை அரசியலமைப்பின் இதர சட்டங்களையும் சேர்த்தல்லவா எதிர்க்கவேண்டும்? அரசியலமைப்பின் 6 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆதரவாக சத்தியப் பிரமாணம் செய்த முன்னணியின் தலைவர்கள், 13 ஆவது திருத்தத்தை பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்குழுவுக்குள் பிளவை ஏற்படுத்த முற்படுவது அப்பட்டமான ஒரு சுயநல அரசியலாகும்.
ஆகவே, இணைப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பிளவை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக 13-எதிர்ப்பு என்பதை முன்னணி, தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்த முற்படுகின்றதா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக, சஜித் பிரேமதாசாவின் அணியோடு சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு முண்டியடித்து முதலாவதாகச் சென்று கையொப்பமிட்டது ஏன் என்ற கேள்வியும் இங்கே எழுவதைத் தவிர்க்கமுடியாது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிப்போராடும் அமைப்பில் பிளவை ஏற்படுத்தியதைப்போல, இப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பிலும் பிளவை ஏற்படுத்த முன்னணி முற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே முன்னணியினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என இனப்படுகொலைக்கு நீதி கோரிப்போராடும் மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கடந்த நான்கு வருடங்களாக அதனை முன்னெடுத்துவரும் நிலையில், முன்னணி தனியான கட்டமைப்பு ஒன்றை அமைக்க முற்பட்டிருப்பது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேவேளையில், வேலன் சுவாமிகள் இதில் கலந்துகொண்டமையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சுவாமிகள் யாருடைய நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி இந்த இடத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்படுத்திய குழப்பம் ஒருபுறமிருக்க, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற போராட்டத்தினை முன்னெடுத்த போது முதன்மைப்படுத்தப்பட்ட வேலன் சுவாமிகளோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்தச் சங்கத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை 2013 இல் இலங்கை வந்திருந்தபோது, ஐ.நா.விடம் நீதி கேட்டுவிட்டு, பின்னர் தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் 2019 பதவிக்கு வந்தபோது அதனிடமும் நீதி கேட்டார்கள். அதைப்போலவே, ஓ.எம்.பி. எனப்படும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தையும் இரகசியமாகச் சந்தித்திருந்தார்கள். இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தாலும், யாருடைய முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி ஏற்கனவே எழுந்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான், வேலன் சுவாமிகளையும் இந்தச் சங்கத்தினரையும் இயக்குவதன் பின்னால் பிழையான ஒரு வெளித்தரப்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தைத் தமது அமைப்பு ஆதரிக்கவில்லை என்று தெரிவிக்கும் சுவாமிகள், ஆனால், அதைப் பொதுவாக்கெடுப்புக்கு விடலாம் என்பது போன்ற குழப்பமான கருத்துகளையும் வெளியிட்டுவருகிறார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் பிரஸ்தாபிக்கிறார்.
கொழும்புப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தேவையில்லை என்பதிலும், சுயநிர்ணய உரிமையைக் கைவிடாத தீர்வே சரியானது என்றும், முள்ளிவாய்க்கால் வரை நடந்த போராட்டத்தின் ஈகங்களையும், அவற்றின் பின்னான வட்டுக்கோட்டைத் தீர்மானம் போன்ற ஜனநாயக விழுமியங்களையும் தெளிவாக வேலன் சுவாமிகள் அவர் உறுதியாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைப்பது போலத் தெரிந்தாலும், அவரது பின்புலத் தொடர்புகள் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்டு நீதி கோரிப்போராடும் மக்களால் அன்றி – வெளிநாடுகளில் உள்ள சிலருடைய முடிவுகளை நிறைவேற்றும் ஒருவராகவே அவர் இருந்துவருகிறார். வேலன் சுவாமிகள்.இவரின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிக்கும் போது அவர் மதத்தலைவர்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் வெளித்தரப்புகளால் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிப் போராட்டத்தில் இந்தியத் தரப்பின் எடுப்பார் கைப்பிள்ளை அரசியல் தரப்புகளை முன்னிலைப் படுத்தியதிலும் வேலன் சுவாமிகளுக்குப் பின்னால் இருப்பவர்களுக்குப் பங்கு உண்டு.
ஆகவே, இந்த வெளித்தரப்புகளிடம் இருந்து விடுபட்டு வேலன் சுவாமிகள் சுயாதீனமாகச் செயற்படுவதை அவர் நடைமுறையில் நிரூபிக்கும் வரை, அவரை மாத்திரம் முன்னிலைப்படுத்தியதாக சிவில் சமூகமோ, நினைவேந்தல் முன்னெடுப்புகளோ அமைவது ஆபத்தில் போய்முடியலாம்.
நினைவேந்தல் நிகழ்வுகளை வேலன் சுவாமிகளைகொண்டு கையகப்படுத்தி, அவற்றை வேறு விதமாகத் திசை திருப்பிவிட சில வெளித்தரப்புகள் முயற்சித்துவருகின்றன. அதேபோல, மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று வரும்போது, அதிலே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தமது தேவைக்கு ஏற்ற வகையில் மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கும் அதே தரப்புகள் சில தனிமனிதர்கள் குறியீடுகளாகப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
வேலன் சுவாமிகளின் உணர்வையும், முயற்சிகளையும் மதிக்கும் அதேவேளை, தன்னைப் பற்றிய தொடர்ச்சியான நம்பகமான வரலாறு ஒன்றை அவர் உருவாக்கும் வரை ஒரு தனி மனிதராக அவரைக் குறியீடாக முன்வைத்து சிவில் சமூகமோ பொதுக்கட்டமைப்புகளோ இயங்குவது தேசியத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை அவரே ஏற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.
ஆகவே, முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அந்தக் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாக அதன் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில், தமது கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக முள்ளிவாய்க்காலை நினைவுகூருவதற்காக புதிய கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
கட்சி, குழு மற்றும் தனிமனிதக் குறியீடுகள் முன்னிலைப்படுத்தப்படாத முறையில் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். என அதில் குறிப்படப்பட்டுள்ளது.