தங்களுக்கு நன்மை தரக்கூடியவாறான பொருளாதார நடவடிக்கைகளிலேயே இராணுவம் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், அதனால் மக்களுக்கு எத்தகைய நன்மைகளும் கிடையாது எனவும் கூறியிருக்கின்றார்.
அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்திருக்கலாம்.
ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை மட்டும் அழைத்திருக்கிறார்கள். தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் இணைந்து பேச்சினை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் ஏதாவது நன்மை தீமைகள் பெற்றுள்ளீர்களா என்ற அடிப்படையில் சில கேள்விகள் அமெரிக்க தூதரால் எழுப்பப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் அதை கட்டாயம் செய்வார் என்ற அடிப்படையில் சித்தார்த்தன் தனது கருத்தை தெரிவித்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது என்றால் இதனை செய்திருக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்காமல் விட்டுவிட்டு காலக்கிரமத்தில் செய்வோம் என்பதில் அர்த்தமில்லை.
வடகிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலைமைகள், பொருளாதார நிலைமை பிரச்சனைகளுக்குப் பிறகு தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
அதற்குரிய பதில்களை நாங்கள் கூறியிருந்தோம். 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டார்களோ அதே போலவே தற்போது தென்னிலங்கையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
இது தமிழ் மக்களுக்கு புதிய அனுபவம் அல்ல. நாடு முழுவதும் பல்வேறு பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியிலும் இருப்பதை மக்கள் கஷ்டமான நிலையில் வசிப்பதையும் அவருக்கு தெரிவித்த தெரியப்படுத்தினோம்.
இலங்கை மக்களுக்கு அமெரிக்கா செய்யக்கூடிய உதவிகளை செய்வோம் என அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். இதைவிட இராணுவம் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண குடாநாட்டில் பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கைவசம் வைத்திருப்பது சம்பந்தமாகவும் கேட்கப்பட்டது. இவற்றை வைத்துக்கொண்டு இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியை அவர் கேட்டிருந்தார்.