யாழ்.நகரில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து அச்சுறுத்திக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நகரை அண்டிய பகுதியில் வீதியால் வந்த இளைஞன் ஒருவனிடம் சுமார் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பழைய பூங்கா வீதியை சேர்ந்த மேற்படி இளைஞனை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள் தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய புகைப்படத்தை பேர்ஸில் வைத்திருப்பதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளனர்.
பின்னர் இளைஞனிடமிருந்த 6 ஆயிரம் பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞன் வழக்கிய முறைப்பாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல் கடந்த ஒருவார காலத்திற்குள் ஏற்கனவே 3 வழிப்பறி சம்பவங்கள் யாழ்.மாநகரில் இடம்பெற்றிருக்கின்றது. இது 4வது சம்பவமாகும். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார்,
22 மற்றும் 24 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.