சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் அமைக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக கட்டட வேலைகளை நிறுத்தி அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவமானது நேற்று மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் இணைந்து குறித்த காடழிப்பு நடவடிக்கை மற்றும் இயற்கை தோணாக்களை அடைப்பது, அனுமதி இல்லாமல் கட்டடங்களை அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காடழிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து விடயம் தொடர்பாக பார்வையிட சென்றுள்ளனர்
இதன்போது சட்டவிரோதமான முறையில் அங்கு இடம்பெறும் செயற்பாடுகளை அவதானித்து இவர்கள் அரசியல்வாதிகள் உயர் மட்ட அரச அதிகாரிகள் போன்றவர்களை தொடர்புகொண்டு வினவியபோது இது தொடர்பாக யாருக்கும் தெரியாது எனவும், குறித்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் இச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இடத்தில் பயங்கரவாத செயற்பாடு ஒன்றிற்கு குறித்த வேலைத்திட்டம் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர் சுரேந்திரன் சுட்டிக் காட்டியதோடு வேலைத் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த களுவன்கேணி பிரதேசத்தின் கிராமசேவையாளர் குறித்த சட்டவிரோத வேலைத்திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், கட்டடம் அமைத்து கொண்டிருப்பவர்களை உடனடியாக கட்டட வேலைகளை நிறுத்தி அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு கூறி அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.
குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாக போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.