நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நேற்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முன்வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கப்பட வேண்டும்.
அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்பட்டாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்படல் வேண்டும் என்ற யோசனைகளைத் தாம் முன்வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.