காட்டு யானைகளால் பயன் தரக்கூடிய நிலையில் 28 தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கரவட்டித்திடல் பகுதியில் 04.05.2022 நேற்றைய தினம் இரவு 3 மூன்று காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளன.
அவை ஒரு பயனாளி வீட்டில் பயன் தரக்கூடிய நிலையில் இருந்த 28 தென்னை மரங்களையும், அயல் காணியில் இருந்த 15 தென்னங்கன்றுகளையும் முற்றுமுழுதாக அழித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இதேவேளை மயில்வாகபுரம், கொழுந்துப்பிலவு, பிரமந்தனாறு, பெரியகுளம், கல்மடுநகர் போன்ற கிராமங்களில் பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களை அழித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்ட பயிர் செய்கைகளை தொடர்ச்சியாக அழித்து வருவதால் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இது போன்று தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் கவலை தெரிவித்துள்ள மக்கள் இவ்வாறான அழிவுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.