நாளுக்கு நாள் பசி, பட்டினி மற்றும் போக்குவரத்து இடர்ப்பாடு காரணமாக மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. பாடசாலை நேரங்களில் மாணவர்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்காக அந்த மாணவர்களிடம் கேள்வி கேட்க எவராலும் முடியாது.
இப்போது அரசாங்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள போராட்டமானது அனைத்துத் துறைகளையும் முடக்கி வருகிறது. இது எமது எதிர்கால சந்ததியாகிய குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது. இவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற சாதகமான மார்க்கங்கள் எதனையும் எவரும் கண்டறிவதாக இல்லை. சரி பாடசாலைகளை இயக்கி குழந்தைகளின் கல்வி வழம்பெற அனைவரும் ஒத்துழைப்போமென்றால் அதற்கான தடைகளே ஏராளமாக வருகின்றன.
மாணவர்களின் ஆசிரியர்களின் அதிபர்களின் கல்விசார் உத்தியோகத்தர்களின் போக்குவரத்து மார்க்கங்கள் படு மோசமாக உள்ளன.
உண்மையில் இந்நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையில் இப்போதைய அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமாக இருந்தால் பாடசாலைக்கான போக்குவரத்து மார்க்கங்கள் அனைத்தையும் இலவசமாக்க வேண்டும். அவற்றை விடுத்து மாற்றுவழிகளைத் தேடக்கூடாது.
இந்நாட்டில் போராட்டம் நீண்டு செல்லுமாக இருந்தால் மாணவரின் கல்வி மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும். பசியும், பட்டினியும், விரக்தியும் அவர்களை மாற்று வழிகளுக்குக் கொண்டு விடும். அதற்கு உதாரணமாக குழந்தை மாணவர்கள் பாடசாலைக்கே தீ வைத்த சம்பவம் சாதாரணமான ஒன்றல்ல.
இதே மாணவப் பராயத்தைத் தாண்டி உழைத்து வாழ ஆசைப்படும் இளையோரே இன்று ஜனநாயக வழியில் போராடிவருகின்றனர்.
ஆகையால் இந்நாட்டில் உள்ள அனைவரும் தீர்க்க தரிசனமாகச் சிந்தித்து எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை அழிந்துவிடாமல் பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்களுக்கு பழி வந்துவிடாமல் முடிவுகளை உடனடியாக எடுத்தே வேண்டும்.