அதிபர், ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு சமூகமளிக்க மாட்டார்கள்….!இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன்.

அதிபர், ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

காலிமுகத்திடல் போராட்டம் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இதன் மூலம் முழுமையான இராணுவ ஆட்சியை உருவாக்கும் நோக்கிலேயே கோட்டாபய அரசாங்கம் செயற்படுகின்றது.

தமது ஆட்சிக்கான அதிகார போதையில், சிங்கள மக்களுக்கு பொய்களைக் கூறிய ஆட்சியாளர்கள் – தமிழினத்தை இனவழிப்புச் செய்து இன்று தன் சொந்த இனத்தின் ஜனநாயக போராட்டங்களையே நசுக்க முனைந்து, பாரிய வன்முறைச் சம்பவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

கட்டுமீறிய இன்றைய சூழலில், இந்த கொலைகார, ஊழல், அடக்குமுறை ஆட்சியாளர்கள் மக்கள் மட்டத்திலிருந்து அகற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட அரசாங்கம் அகற்றப்படும் வரையில் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை தொடரவுள்ளோம்.

இதன்படி அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் மே 10 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்பதையும், பணிப்பகிஸ்கரிப்பின் போது, விடுமுறை தொடர்பாக விண்ணப்பிக்கவோ அல்லது விடுப்பு குறித்து அறிவிக்கவோ வேண்டியதில்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.

எனவே அதிபர், ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews