சிறைகைதிகளையும், கிராமிய ஏழைகளையும் ஒன்றுதிரட்டி பிரதம மந்திரியின் வாசஸ்தலத்தினை அரச பயங்கரவாதத்தின் குகையாக்கி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை மொட்டுக் கட்சியினரதும், அவர்களின் தலைமையினதும் கொடூர முகத்தை காட்டி நிற்பதாக” அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நேற்று (11) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அலரி மாளிகைக்கு முன்னாலும், காலிமுகத்திடலிலும் நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டத்தினை மொட்டு கட்சியினர் திட்டமிட்டு சிதைத்தழிக்க கிராமிய ஏழைகளையும், சிறை கைதிகளையும் ஒன்றுதிரட்டி வந்து பிரதம மந்திரியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தினை அரச பயங்கரவாதத்தின் குகையாக்கி அவர்களால் நடத்த முன்னெடுக்கப்பட்ட வன்முறை மொட்டுக் கட்சியினரதும் அவர்களின் தலைமையினதும் கொடூர முகத்தையும், தொடர்ந்து இடம்பெற்றுள்ள வன்முறையினையும் வன்முறைக்கு பதில் வன்முறையல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது.
ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பொதுமக்களும் ஈற்றில் வன்முறையை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைக்கு மூலகர்த்தாவாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ச அவர்களின் கையாட்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.
எந்த நாட்டிற்கு தப்பி சென்றாலும் அவர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வந்து நீதி முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.
வன்முறையை தமதாக்கியவர்களும் தாக்குதலுக்கு உள்ளானவர்களும் தேசியக்கொடியுடன் நின்றனர். தெற்கில் தேசியகொடி என்பது வன்முறையின் அடையாளமாகியுள்ளது. இதுவே கடந்த கால அனுபவமுமாகும். இதனோடு பௌத்த கொடியை இணைத்து கொள்வதையும் நாம் கண்டுள்ளோம்.
இது தேசிய பேரினவாதத்தின் சிந்தனையோடு தான் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பும் இன்றும் முன்னெடுக்கப்படுவதோடு 2009 இனப்படுகொலையும் நடத்தப்பட்டது. வெற்றிக் கொண்டாட்டமும் வருடா வருடம் நடத்தப்படுகின்றது. இதற்கு பரிகார நீதி கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நடைபெறும் வன்முறை தீ வைப்பு சம்பவங்கள் இன அழிப்பு நினைவு கூறல் நிகழும் மே மாதம் நிகழ்வதை கண்டு தமிழர்கள் மகிழ முடியாது. மகிழவும் கூடாது.
இங்கு நடப்பது யுத்தமும் அல்ல இன அழிப்பும் அல்ல. இதற்கு முகம் கொடுத்தார்களாக ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனும் குரலை உயர்த்த வேண்டிய மனிதாபிமான கடப்பாடும் நமக்கு உள்ளது.
இது தெற்கின் மக்களுக்கு எமது நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்தும். தமிழர்கள் அமைதி வழியில் தான் போராட்டத்தை ஆரம்பித்து நிறுத்த நிலைக்கு தள்ளப்பட்டனர் ஆதலால் நீதி ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டும் அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருத்தல் வேண்டும்.
தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 18ஆம் திகதி வட கிழக்கில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முற்போக்கு சக்திகளும், ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் செய்வோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எந்தவகையிலும் தடுப்பதற்கு நினைக்காது அமைதியான முறையில் அதனை நிகழ்த்துவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும்”. என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.