ரணில் பிரதமராவதை ஏற்க முடியாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்!

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானம் எடுத்துள்ளாரெனக் கூறப்படும் விடயம் தொடர்பில் கர்தினால் இன்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அதில், விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே, அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல.

அரசியலில் தோற்கடிக்கப்பட்ட, மக்களால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை மக்கள் விரும்பவில்லை. மரியாதைக்குரிய நேர்மையானவரையே மக்கள் விரும்புகிறார்கள்.

மகாநாயக்க தேரர்கள் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரைக்கு என்னவானது என்பது அனைவரின் ஊகமாக உள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது. இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கசார்பற்ற நபரால் மட்டுமே அது நிகழ முடியும் – என்றும் கர்தினால் மேலும் கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews