அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றம் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்றமைதான் அந்த எதிர்பாராத மாற்றமாகும். அதுவும் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படாத தேசியப்பட்டியல் உறுப்பினர், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்து எடுக்கப் பட்டமையை உலக அதிசயங்களில் ஒன்று என்றும் கூறலாம். மூளையால் மட்டும் அரசியல் செய்பவர், மூலோபாயங்களை விட தந்திரோபாயங்களில் அதிக அக்கறை செலுத்துபவர் என்கின்ற அவரது மரபு ரீதியான இயல்புகள் தான் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மருமகன் என்பதை அவர் திரும்ப ஒரு தடவை மெய்ப்பித்திருக்கின்றார்.
சில அரசியல்வாதிகளை முழுமையாக வெட்டிச் சாய்த்தாலும் மீள மீள எழுச்சியடைவர். ரணிலும் அவர்களில் ஒருவர். மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, மகிந்த என்போரையும் இப் பட்டியலில் சேர்க்கலாம். மகிந்தரின் முன்கோபத்தனம் அவரை நெருக்கடிகளில் மாட்டி விடுவதுண்டு. ரணிலும், கருணாநிதியும் இலகுவில் நெருக்கடிகளுக்குள் அகப்படுவதில்லை.
ரணிலின் பதவியேற்பு அண்மைக்காலமாக நிலவிவந்த அரசியல் சூழலை முழுமையாக மாற்றுவதாகவும் இருக்கலாம்.
சில வாரங்களில் அப்போக்கு துலக்கமாகத் தெரியத் தொடங்கும். அதிதீவிரவாதம்.
குறுகிய காலத்திற்குள்ளேயே முதலில் சீர்திருத்தச் செயற்பாட்டிற்குள் தள்ளும். பின்னர் எதிரிக்கு சேவகம் செய்வதாக நிலைமைகளை மற்றும். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் இது நேர்ந்துள்ளதா?
ரணில் பிரதமராக முடி சூடுவதற்கு பல காரணிகள் தொழிற்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராஜபக்சாக்கள் தற்காப்பு நிலையை எடுக்க முயற்சித்தமையாகும். மகிந்தரின் முன்கோபம் அனைத்து ராஜபக்சாக்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் தற்காப்பு நிலைக்கு தள்ளியுள்ளது. மாசேதுங்கின் ஈரடி முன்னால் ஓரடி பின்னால் என்ற நிலையை ராஜபக்சக்கள் காலம் பிந்தியாவது எடுத்துள்ளனர். யுத்தவாத நாயகர்கள் கடற்படை முகாமிற்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை வந்ததன் பின்னர் தான் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கின்றது.
போர்க்குற்றம் , உயிர்த்த ஞாயிறு நிகழ்வை அரசியலுக்கு பயன்படுத்திய குற்றம் , காலி முகத்திடல் , அடாவடித்தனக்குற்றம், ஊழல் குற்றம் என நான்கு வகைக் குற்றங்களுக்குள் அவர்கள் மாட்டுப்பட்டுள்ளனர். வெறுமனே சட்டப்பிரச்சினை என்றால் இவர்கள் புகுந்து விளையாடியிருப்பர், மாறாக. சிங்கள மக்களின் கூட்டுக் கோபம் அவர்களை நோக்கி சரிந்தமையால் கடற்படை முகாமுக்குள் ஒதுங்கி தற்காப்பு நிலையை எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தற்காப்பு நிலையை வெற்றிகரமாக்க வேண்டுமாக இருந்தால் இரண்டு விடயங்கள் நடந்தாக வேண்டும். ஒன்று அரசியல் அதிகாரத்தின் பிடி தங்களிடமும் இருக்க வேண்டும். இரண்டாவது அரசியல் அதிகாரத்தின் மற்றைய பிடி தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரிடம் இருக்க வேண்டும். தம்மை பாதுகாக்க ஒருவராக ராஜபக்சாக்கள் ரணிலைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ரணிலை ராஜபக்சாக்கள் பாதுகாப்பதும், ராஜபக்சாக்களை ரணில் பாதுகாப்பதும் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து வருகின்ற ஒன்றாகும். ரணிலுக்கு உட்கட்சிப் பிரச்சினைகள் வந்தபோது மகிந்தர் அவரைக் காப்பாற்றினார். ராஜபக்சாக்களுக்கு ஜெனிவா நெருக்கடி வந்தபோது ரணில் காப்பாற்றினார். தற்போது மீண்டும் காப்பாற்ற முன்வந்திருக்கின்றார். “ராஜபக்சக்களின் காவலரே ரணில்” என்ற ஜே.வி.பி. தலைவனின் கூற்று முற்றிலும் உண்மையானதே!
இரண்டாவது இந்திய – மேற்குலகத்தரப்பின் ஒத்துழைப்பாகும். ராஜபக்சாக்களை தற்காப்பு நிலைக்கு தள்ளவேண்டும் என்பதற்காகவே மேற்குலகம் காலி முகத்திடல் போராட்டக் காரர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அதிலும் இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு இருந்தது. அரசாங்கத்தை இந்தியா பார்க்கட்டும் போராட்டக்காரர்களை மேற்குலகம் பார்க்கட்டும் என்பதே அந்த உடன்பாடாகும். இந்த உடன்பாட்டில் இரண்டு நோக்கங்கள் இருந்தன.
ஒன்று இந்த இரண்டு தரப்புக்கள் மத்தியிலும் சீனா நுழைவதைத் தடுப்பது, இரண்டாவது எந்தத் தரப்பு வெற்றி பெற்றாலும் தமது பிடிக்குள் வைத்திருப்பது.
இந்தியா அரசாங்கத்துடன் நின்றுகொண்டதால் சொற்ப காலத்திலேயே பிடுங்க வேண்டியதைப்பிடுங்கிக் கொண்டது. தற்போது புதிய ஆட்சியாளர்களுக்கும் இந்தியா சார்பாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பேண வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடல் போராட்டம் நீண்டு கொண்டு செல்வதை இந்தியாவும் விரும்பவில்லை , மேற்குலகமும் விரும்பவில்லை இதற்கு தங்களது கையை விட்டுப் போராட்டம் போய்விடும் என்ற அச்சம் ஒரு காரணம்.
இலங்கைத்தீவில் குழப்பங்கள் தொடர்ச்சியாக இருப்பது தங்கள் இந்தோ – பசுபிக் மூலோபாய நலன்களை பாதிக்கும் என்பது இரண்டாவது காரணம் இந்தியாவிற்கு தொடர் குழப்பம் தனது தேசிய பாதுகாப்பை பாதிக்கும் என்ற அச்சமும் மேலதிகமாக இருந்தது.
இதனால் தங்களின் பிடியும் ஆட்சி அதிகாரத்தில் வலுவாக வந்ததன் பின்னர் போராட்டத்திற்கான ஆதரவை நிறுத்தவே விரும்பியிருந்தன. தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போராட்டத்திற்கான மேற்குலக ஆதரவு நிறுத்தப்படலாம்.
சீனா – இந்தியப்போட்டியைப் பொறுத்த வரை ரணில் இரண்டிலிருந்தும் சமதூரத்தில் நின்று கொண்டு இரண்டையும் கையாள முயற்சிப்பார். ஒரு போதும் சீனா பக்கம் சாய்ந்து விட மாட்டார். இது ஒன்றே இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் போதுமானது.
இலங்கைத் தீவில் சீனா முழுமையாக காலூன்றிய நிலையில் அதனை முழுமையாக அகற்ற முடியாது என்பது இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் நன்றாகவே தெரியும். எனவே சீனா முழுமையான ஆதிக்கம் செலுத்தாமல் தங்களுக்கும் வலுவான பிடி இருக்கக்கூடிய நிலை இருப்பது தற்போதைக்கு அவர்களைப் பொறுத்தவரை போதுமானதாக உள்ளது.
மூன்றாவது காரணி பெருந்தேசியவாதமாகும். பெரும்தேசியவாதம் நெருக்கடி காலங்களில் லிபரல் முகமூடியை அணிந்துகொண்டு பெரும்தேசியவாதத்தின் இருப்பைப் பாதுகாக்கும். சாதாரண காலங்களில் இனவாத முகமூடியை அணிந்து கொண்டு சக தேசிய இனங்கள் மீது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும். தற்போது அதற்கு நெருக்கடிக்காலம்.
இதனால் ரணில் என்கின்ற லிபரல் முகமூடியை அணிந்துகொண்டு பெருந்தேசியவாதத்தின் இருப்பைப் பாதுகாக்க முயல்கின்றது.
காலிமுகத்திடல் போராட்டம் பற்றி பெரும்தேசியவாதத்திற்கு எப்போதும் ஒரு அச்சம் இருந்தது. போராட்டத்தின் வளர்ச்சி நிலை பெரும்தேசியவாத அரசையையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்பதே அந்த அச்சமாகும். போராட்டக்காரர்கள் நெருக்கடியின் ஊற்றை ஆழமாகத் தேடுவார்களாக இருந்தால் அரசின் கட்டமைப்பை மாற்றுதல் என்ற முடிவுக்கே வந்திருப்பர். அரசை மாற்றுதல் என்ற நிலை வந்தால் அது அனைத்து தேசிய இனங்களையும் அவற்றின் அடையாளங்களுடன் அங்கீகரித்தல் என்ற நிலையை நோக்கியே நகர்ந்திருக்கும்.
ஏற்கெனவே ஆங்காங்கு போராட்டக்காரர்களிடம் அதற்கான கூறுகள் தென்பட்டிருந்தன. பண்டாரநாயக்கா சிலையில் கண்களை மூடியமை, இசைப்பிரியா, சிவராம் போன்றவர்களின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருந்தமை என்பன அதன்
வெளிப்பாடுகளே! இந்த மாற்றங்களை பெரும்தேசியவாதம் விரும்பியிருக்கவில்லை.