சீனாவை எதிரியாக்கலாமா….?அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் அரசியலின் மோசமான மரபு எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும் இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லீம் மக்கள், இந்தியா என எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர்.

தற்போது சீனாவை எதிரியாக்கும் முயற்சி நடைபெறுகின்றது. இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. அரசியல் செற்பாடு என்பது மூலோபாயத்தை மட்டும் கொண்டதல்ல. தந்திரோபாயத்தை உள்ளடக்கியது. தந்திரோபாய பற்றாக்குறையே இங்கு நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது.

பூநகரி கௌதாரி முனையில் உருவாக்கப்பட்ட சீனாவின் கடலட்டை பண்ணை விவகாரம் இன்று தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. “குயிலன் பிறைவேற் லிமிட்டற்”; என்ற பெயரில் இலங்கை கம்பனிப் பதிவுச் சட்டத்தின் கீழ் இக் கடலட்டைப் பண்ணை பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிச்சாவேலி, யுவான்சென் எனும் இரு சீனர்களும் தம்மிக.டி.சில்வா என்ற கொழும்பைச் சேர்ந்த சிங்களவரும் இக் கடலட்டைக் கம்பனியின் பணிப்பாளர்களாக உள்ளனர். கடலட்டைப் பண்ணையின் பரப்பளவு, கொடுப்பனவுகள், பங்கீடுகள் என்பன கம்பனியின் பதிவில் காணப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இரு சீனப் பணிப்பாளர்களும் தங்களது முகவரிகளாக சீன முகவரிகளையே கொடுத்துள்ளனர். இக் கம்பனி முறையான அனுமதியைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பபடுகின்றது. அப்பிரதேச மக்களின் அனுமதியும் பெறப்படவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என ஊடகங்களுக்குக் கூறியிருக்கின்றார். அவருக்கும் அனைத்தையும் சட்டப் பிரச்சினையாக்கும் சுமந்திரனின் நோய் தொற்றிவிட்டது போல தெரிகின்றது. இவ்விவகாரத்தில் மேலே துருத்திக்கொண்டு நிற்பது சட்டப்பிரச்சினையல்ல. மாறாக அரசியல் பிரச்சினையே! இதற்கு சட்ட வழிமுறைகளைவிட அரசியல் வழிமுறைகளையே அதிகம் தேடவேண்டும்.

சீனர்களும் சிங்களவர்களும் இணைந்து பண்ணையை ஆரம்பிக்கின்றார்கள் என்றால் இது முதலீட்டுத் திட்டடமல்ல. பச்சையான ஆக்கிரமிப்பே! கோத்தபாய அரசாங்கம் முதலீட்டுத்திட்டங்களையும் ஒரு ஆக்கிரமிப்புக் கருவியாக பயன்படுத்துகின்றதா? என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. நாவற்குழியில் புத்த விகாரை அமைக்கப்பட்ட போது சட்ட வழிமுறையால் எந்தத்தீர்வையும் காணமுடியவில்லை. ஆனால் யாழ்பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்ட போது அரசியல் வழிமுறையால் தீர்வு காண முடிந்தது.

இன்று கோத்தபாய அரசாங்கம் அஞ்சுவது தமிழ்த் தரப்பின் சட்ட அணுகுமுறைகளுக்கல்ல மாறாக அதன் உலகளாவிய அரசியல் அணுகுமுறைகளுக்கே! உலகளாவில் ஜனநாயக மீறல்காறன், மனித உரிமை மீறல்காறன் தமிழ், முஸ்லீம் மலையக மக்களை ஒடுக்குகின்றவன் என்ற பெயரை அரசாங்கம் எடுத்துவிட்டது. இதனால் அதன்வழி அரசியல் அணுகுமுறையை  மேற்கொள்ளும் போது உலகளாவிய அழுத்தம் வர அரசு தடுமாறுகின்றது. அரசாங்கத்தில் கைவைக்கும் போது அதன் பலத்தில் அல்ல பலவீனத்தில் தான் கைவைக்க வேண்டும். இதுபற்றி இக் கட்டுரையாளர் முன்னரும் பலதடவை கூறியிருக்கின்றார்.

எனவே கடலட்டைப் பண்ணை விவகாரத்தை அவதானமாகக் கையாள வேண்டும். முதலில் விவகாரத்தைப் பரிசீலிப்பதற்கான அளவுகோல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலில் இரண்டு அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டும். ஒன்று சீனா தொடர்பான தமிழ் மக்களின் வெளிநாட்டுக் கொள்கை என்ன? இரண்டாவது தமிழ் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கை என்ன?

வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு இன்னோர் நாட்டுடன் உறவுகளைப் பேணுவதற்கு அடிப்படையாக இருக்கின்ற கொள்கையாகும். அது நாட்டின் தேசிய நலனையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். தேசிய நலனில் நாட்டின் பாதுகாப்பும் , நாட்டின் பொருளாதாரமும் முக்கிய இடத்தை வகிக்கும். வெளிநாட்டுக் கொள்கை நாடுகளுக்கு மட்டும் தான் தேவையென்றில்லை விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களுக்கும் வெளிநாட்டுக் கொள்கை தேவை. இந்த வகையில் தமிழ் மக்களுக்கும் வெளிநாட்டுக் கொள்கை தேவையாகும். ஆனால் துரதிஸ்டவசமாக இதுபற்றி தமிழ்த் தரப்பு இன்னமும் அக்கறைப்படவில்லை. விளைவு வெளிநாட்டுக் கொள்கையும் உருவாக்கப்படவில்லை. பயிற்சிபெற்ற இராஜதந்திரக் குழுவும் உருவாக்கப்படவில்லை. அன்ரன் பாலசிங்கத்திற்குப் பிறகு சர்வதேச விவகாரங்களில் பயிற்சிபெற்ற இராஜதந்திரி இல்லை எனக் கூறலாம். தற்போது சுமந்திரன் சர்வதேச விவகாரங்களை அதிகளவில் கையாளுகின்ற போதும் அவர் தமிழ்த் தேசிய நிலை நின்று கையாள்வதில்லை. தமிழ்த் தரப்பு வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் போதுதான் சீனா பற்றிய எமது அணுகுமுறையும் தெளிவாக முன்னிலைக்கு வரும்.

இலங்கைத் தீவினை மையமாக வைத்து வல்லரசுகளுக்கிடையே ஒரு புவிசார் அரசியல் போட்டி இடம்பெறுகின்றது என்பது எங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இப்போட்டியில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் என்பன ஒரு அணியிலும், அமெரிக்கா மேற்குலகம் , இந்தியா என்பன ஒரு அணியிலும் நிற்கின்றன. இவ்விவகாரத்தில் சீனா பட்டுப்பாதைத்திட்டத்தையும் மற்றைய அணி இந்தோ – பசுபிக் திட்டத்தையும் நகர்த்திவருகின்றது. இரண்டுக்குமிடையே ஆழமான பனிப்போரும் இடம்பெறுகின்றது. கொழும்பு துறைமுகநகர் விவகாரம் அதன் ஒரு விளைவே ஆகும்.

இவ்விரு அணிகளில் சீனா, சிறீலங்கா ஆட்சியாளர்கள் பக்கம் நிற்பதினாலும், தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருப்பதனாலும், புலம்பெயர் தமிழர்;கள் மேற்குலகத்திலும், அமெரிக்க சார்பு நாடுகளிலும் வசிப்பதனாலும்,  போர்க்குற்ற விவகாரங்களுக்கு இவ்வணி தலைமை தாங்குவதனாலும்; சீனா அணிக்கு ஆதரவாக தமிழ்த் தரப்பு நிற்க முடியாது. மாறாக அமெரிக்க-மேற்குலக-இந்திய அணிப்பக்கமே நிற்க  முடியும். இது தவிர்க்க முடியாதது. ஆனால் இதற்காக சீனாவை வலிந்து எதிரியாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களிற்கு இல்லை. எதிரியாக்காமல் இருப்பது சீனா எதிர் அணியில் இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க தமிழ்த் தரப்பிற்கு உதவும்;. அதுவும் இந்திய- மேற்குலக- அமெரிக்க அணி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உறுதியான நிலைப்பாட்டினை எடுக்காத நிலையில் சீனாவை எதிரியாக்குவது ஆபத்தானது. குறிப்பாக இந்தியா எடுக்காத நிலையில் ஆபத்தானது. இலங்கைத்தீவைப் பொறுத்த வரை இந்தியா எடுக்கும் தீர்மானங்களே இவ்வணியின் தீர்மானங்களாக இருக்கும். இந்தியா தற்போதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட மாகாணசபை முறைத்தீர்வையே இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன் வைக்கின்றது. இது எந்த வகையிலும் தீர்வாக இருக்கப் போவதில்லை. சிலர் ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளலாம் எனக் கூறுகின்றனர். ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வு ஆரம்பப் புள்ளிக்கு கூட தகுதியற்றது. எனவே நண்பனாக இல்லாவிட்டாலும் எதிரியாக இருக்கக் கூடாது என்ற வகையிலேயே சீனா கையாளப்படல் வேண்டும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் முகவர் போன்று செயற்படுவதை தமிழ் அரசியல்வாதிகள் கைவிட வேண்டும் “சீனாவை கையாள்வது எப்படி? என இந்தியாவிற்கு தெரியும்” என முகத்திலடித்தால் போல் இந்தியத்தூதுவர் கூறிய பின்னரும் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமது முகவர் பணியைக் கைவிடவில்லை. சீன விவகாரத்தில் இந்தியாவின் நிலை பேராசிரியரும் கவிஞருமான சேரன் குறிப்பிட்டது போல “அணில் ஏற விட்ட நாய்க்கு ஒப்பானது”

இரண்டாவது தமிழ் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கை இது பற்றியும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. ஓய்;வுபெற்ற நிர்வாக அதிகாரி செல்வின் பயனுடைய சில கருத்துக்களைக் கூறி வருகின்றார். தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வரும் வரை நாம் அரசியல் பொருளாதாரத்திலேயே கவனம் செலுத்த முடியும். தமிழ்ச் சமூகத்தை பொறுத்தவரை அரசியல் பொருளாதாரம் என்பது தமிழ் மக்களினது அரசியல் இலக்கை அடைவதற்கான பொருளாதாரமே. அரசியல் இலக்கிற்கு பாதிப்பு தரக்கூடிய பொருளாதாரச் செயற்பாடுகளை எம்மால் அனுமதிக்க முடியாது. சீனாவும் சிங்களத்தரப்பும் இணைந்து உருவாக்கிய கடலட்டை முதலீட்டுத்திட்டம் ஒரு ஆக்கிரமிப்பு பொருளாதார முயற்சியே! இதை அனுமதிப்பது அரசியல் இலக்கிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதலீட்டுத்திட்டங்கள் தேவை. அந்த வகையில் சீனாவின் முதலீட்டுத்திட்டங்களையும் வரவேற்கலாம் ஆனால் அத்திட்டங்கள் பங்கேற்புத்திட்டங்களாக இருக்க வேண்டும். அதாவது தமிழ்த்தரப்பு இணைந்து செயற்படுத்தக் கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். சீன முதலீட்டாளர்கள் தமிழர்களுடன் இணைந்து முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கலாம். பல புலம்பெயர் உறவுகள் அதற்குத்தயாராக இருக்கின்றனர். கட்டமைப்பு சார் அபிவிருத்தித்திட்டங்களாயின் மக்கள் பங்கேற்பு இங்கு இருக்க வேண்டும். சிறீலங்கா அரசுடன் மட்டும் பேசிவிட்டு மேற்கொள்ளும் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் இலக்கிற்கு பாதிப்பு தருவதாகவே அமையும். இந்த அணுகு முறை சீனாவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியது. ஸ்ரீலங்கா அரசும், இந்தியாவும் மட்டும் இணைந்து தமிழர் தாயகத்தில் உருவாக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் போதிய பயன்களைத் தருமெனக் கூற முடியாது.

முதலீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் நேரடி முதலீட்டுத் திட்டங்களே அதிக விளைவுகளைத் தரக்கூடியவை. புலம்பெயர் உறவுகள் எதிர்காலத்திலாவது இதில் கவனம் செலுத்துவது நல்லது.

தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ் மக்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கத்திலும், பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்திலும் உடனடியாகக் கவனம் செலுத்துவது அவசியமானது! இது உருவாக்கம் பெற்றால் சீனாவை வலிந்து எதிரியாக்கும் செயற்பாடும் இல்லாமல் போகும்.

 

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews