நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

இரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.கீர்த்திரத்ன மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கே.கீர்த்திரத்ன தவிர்ந்த ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கீர்த்திரத்ன நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர் ஆகியோரிடம் அறிக்கை கோருமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பவுசர்களையும் 275 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறும் அவற்றின் கட்டமைப்பை மாற்றவோ அல்லது வேறு தரப்பினருக்கு விற்கவோ தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews