சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகிய ஒரே ஒரு கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் மாணவன் தொடர்பில் பாடசாலை சமூகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
63 வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவனான கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் திருக்குமரன் சர்வதேச போட்டிக்காக நோர்வே செல்லவுள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மாணவன் தொடர்பில் குறிப்பிடுகையில்,
இந்த மாணவன் சர்வதேச போட்டிக்காக செல்லும் குழுவில் இடம்பிடித்துள்ள தமிழ் மாணவன் என்பதில் பாடசாலை சமூகம் மகிழ்வடைகிறது. 2 தடவை சர்வதேச போட்டிக்கு சென்ற இவர், மூன்றாவது தடவையும் செல்கின்றார்.
இது இவரின் முயற்சியேயாகும் என்று கூறலாம். இந்த மாணவரை பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது என தெரிவித்துள்ளார்.
தனது முயற்சியால் சர்வதேச போட்டுக்கு சென்று வெற்றி கிண்ணங்களை பெற்றேன். இம்முறையும் போட்டிக்கு செல்கிறேன். எனக்கு ஊக்கமளித்த பாடசாலை சமூகம், பெற்றோர், உதவிய கிளிநொச்சி மக்களிற்கும் நன்றி கூறுகின்றேன் என மாணவன் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நோர்வேயின் ஒஸ்லோ நகரத்தில் குறித்த போட்டி நடைபெற உள்ள நிலையில் இலங்கையிலிருந்து ஆறு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களில் ஐந்து சிங்கள மாணவர்கள் அடங்கும் நிலையில் இவர் ஒருவர் மாத்திரமே தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.