கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய வாதங்கள்
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது.
தமிழ்நாடு அரசு வாதம்
தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி இந்த வழக்கில் ஆஜர் ஆனார். அவர் வைத்த வாதத்தில்,
1. இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.
2. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே குழப்பங்களுக்கு காரணம். ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்.
3. ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க விடும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர் தனி முடிவை எடுக்க முடியாது.
4. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது
5. அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை. குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும்.
6. ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
7.ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?. கோபால் கோட்சே தெரியுமா? அவரை அரசு விடுதலை செய்ததே? அவரை போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும்.
8. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. மாநில அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இதில் நீங்கள் குடியரசுத் தலைவரை கொண்டு வர முடியாது.
9.இந்த விடுதலை தீர்மானத்தில் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார் என்று தமிழ்நாடு அரசு கூறியது.
10. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்புவதாக இருந்தது. அதாவது ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவை எடுக்கும் முடிவிற்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்று கூறியது. அதை உச்ச நீதிமன்றமும் வழி மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.