
தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மே 18ம திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கும் இந்த தீர்மானத்திற்கும் முரண்பாடு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது நாட்டின் மெய்யான நிலைமைகள் குறித்து கனடாவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
போரிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட முனைப்புக்கள் பற்றி கனடாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறைவுக்கு வந்து 13 ஆண்டுகளில் நல்லிணக்க முனைப்புக்களில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான அரசியல் நோக்கமுடைய சிறுபான்மை புலம்பெயர் சமூகத்தினர் மட்டும் இனவழிப்பு என்ற பதத்தை பயன்படுத்தி வருகின்றனர் எனவும், நாட்டில் இனவழிப்பு இடம்பெற்றதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிழையான வழிகாட்டல்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் இடமளித்திருப்பது வருத்தமளிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.