
இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சீனா சாதகமான பங்கை வகிக்க தயாராக இருக்கின்றது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வான் வென்பின் இதனைத் தெரிவித்தார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா முழுமையாக அறிந்துள்ளது.
இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் வினைத்திறனான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக உள்ளது. இலங்கையின் சீனத் தரப்பிற்கான கடனுக்கு முறையான தீர்வைக் காண இலங்கையுடன் ஆலோசனை நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு சீனா உதவுகிறது.
தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதுடன், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை தொடர்ந்தும் ஆற்றும்.
வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதிப் பங்காளிகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தவும், அதன் முதலீடு, நிதிச் சூழலின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பேணவும் சீனா சுதந்திரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் கூறியுள்ளார்.