கோட்டா கோ கம மீது குண்டர் மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் யோசித ராஜபக்ஷ இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முதல் யோசித்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த போதும், மகிந்த தரப்பினால் அது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் யோசித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் நேற்று கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
யோசித ராஜபக்ச, நிதீச ஜயசேகர இருவரும் இரவு வர்த்தக ரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமான நிலையத்திற்குள் நுழைந்ததாக விமான நிலைய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோசித்தவை வரவேற்க பலர் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த நிலையில், பாதுகாப்பான வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யோசித ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அவரின் சகோதருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.