கோட்டாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய படையணியான கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவர் ராஜபக்சக்களின் நம்பிக்கைக்கு உரியவராக செயற்படுபவர் எனவும் பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்குலக நாடுகள் சவேந்திர சில்வாவை தனக்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே தற்போது இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது.
இதன் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவின் முதல் நம்பிக்கைக்கு உரியவராக செயற்பட்ட சவேந்திர சில்வா தற்போது ஓரங்கட்டப்பட்டு கட்டளை பிறப்பிக்க முடியாத பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானி பதவிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தற்போது காணப்படும் குழப்ப நிலையானது படையினரின் செயற்பாட்டினை பொறுத்தவரையில், ஒரு சார்பு நிலை அல்லது படையினரின் செயற்திறன் அற்ற தன்மையாகவே இலங்கை அரசாங்கத்தினால் தற்போது பார்க்கப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.