தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வருடம் மே மாதத்திற்குள் விடுதலை செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எனினும், நன்னடத்தை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தன்னை காப்பாற்ற யாரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டாம் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்
நான் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது ரஞ்சன் ராமநாயக்க, தன்னை காப்பாற்றி விடுவிப்பதற்காக யாரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டாம் என்று தெளிவாகக் கூறினார். அதற்காக தன்னை பலிகடா ஆக்கக்கூடாது என்று தெளிவாக கூறுகிறார்.
ரஞ்சன் ராமநாயக்க அடுத்த ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்பட வேண்டும். எனினும், நன்னடத்தை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரை விற்று அரசாங்கத்துடன் இணைவதை யாரும் நியாயப்படுத்த வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்களின் காலில் பணிந்து விடுதலைப் பெற அவர் தயாராக இல்லை. தனது விடுதலைக்காக யாரும் ராஜபக்ஷக்களின் காலில் விழக்கூடாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறியுள்ளார்.