தீவிர காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொற்றிருந்தமை அறியப்பட்டுள்ளது.
யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த யோயிதா (வயது5) என்ற சிறுமி கடந்த 23ம் திகதி தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் 25ம் திகதி மீண்டும் தீவிரமான காய்ச்சல் காய்ந்துள்ளது.
இதனையடுத்து இணுவிலில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு மருந்து பெறப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவே சிறுமிக்கு காய்ச்சல் தீவிரமானதுடன்,
வாந்தி மற்றும் காய்ச்சல் தீவிரமாக இருந்திருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு
சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்ற காலை சிறுமி உயிரிழந்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் அண்மைய நாட்களில் உயிரிழந்த 2வது குழந்தை இதுவாகும்.
இந்நிலையில் காய்ச்சல் இருப்பின் அது தொடர்பாக கூடிய கவனம் எடுக்கும்படி சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கும் நிலையில் அரச வைத்தியசாலை ஒன்றை அணுகி
சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றுவது பாதுகாப்பானது.