
யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்று முன் தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இம்மாதம் 2ம் திகதி இரவு மதுபோதையில் இரு கோஷ்டிகள் மோதிக் கொண்டதில் நெல்லியடி – திக்கம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ஞா.குணசோதி(வயது25) என்ற இளைஞன் குத்திக் கொல்லப்பட்டார்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகநபர் 24 நாட்கள் கடந்த பின்னர் நேற்றய தினம் சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர் கத்தியால் குத்துவதாக வாக்குமூலம் மற்றும் சீ.சி.ரீ.வி கமரா பதிவுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் மன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.
எனினும் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆட்சேபித்த சிரேஷ்ட சட்டத்தரனி என்.சிறீகாந்தா தனது நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார். இதனடிப்படையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்