அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை, அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும்.
இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் 21வது திருத்தத்தில் இவ் உறுதிப்படுத்தல்கள் எவையும் இல்லை. இங்கும் கூட வெறுமனவே தமிழ், முஸ்லீம், மலையக பிரதிநிதிகள், அரசியலமைப்புப் பேரவையில் அங்கம் வகிப்பதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
குறைந்தபட்சம் தமது மக்கள் சம்பந்தமான விவகாரங்களிலாவது தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இருக்கவேண்டும். இல்லையேல் கதிரைக்குப் பாரமாக இருப்பதைத் தவிர வேறு பயன்கள் கிட்டப்போவதில்லை.
சுயாதீன ஆணைக்குழுக்களிலும் திட்டவட்டமான பிரதிநிதித்துவம் தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு இல்லை. ஜனாதிபதி தயவு பண்ணினால் மட்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். ஜனாதிபதியின் தயவினால் நியமிக்கப்படும் ஒருவர் அவருக்கு விசுவாசமாக இருக்க முற்படுவாரே தவிர தான் சார்ந்த மக்களுக்கு விசுவாசமாக இருப்பர் எனக் கூறிவிட முடியாது.
அமைச்சரவையிலும் இதுதான் நிலமை. ஜனாதிபதியின் விசுவாசிகள் தமிழ், முஸ்லீம், மலையக மக்களிலிருந்தும் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் சில சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தார்களே தவிர தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த அடையாளம் சார்ந்த விவகாரங்களில் ஒரு கல்லைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. தொண்டமானும், அஸ்ரப்பும் சற்று விதிவிலக்காக சிறிய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தார்கள் எனக் கூறலாம். தமிழ் முற்போக்கு முன்னணியையும் மலையக பிரதேச சபைகள் அதிகரிப்பு விவகாரத்தில் சில அடைவுகளைப் பெற்றுள்ளனர் எனக் கூறலாம்.
ஆனால் வடக்கு – கிழக்கிலிருந்து அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களினால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை. டக்ளஸ் தேவானந்தாவிற்கு மட்டுமல்ல பிள்ளையான், வியாளேந்திரனுக்கும் இது பொருந்தும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் பணியைக்கூட கிழக்கின் அரச விசுவாசிகளினால் மேற்கொள்ள முடியவில்லை.
எனவே மொத்தத்தில் ஜனாதிபதியிடம் உள்ள சில அதிகாரங்களை அமைச்சரவைக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும், அரசியலமைப்புப் பேரவைக்கும் கைமாற்றுவதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இது சிங்கள அரசாங்கத்தை ஜனநாயகப்படுத்துகின்ற பிரச்சினை. சிங்கள அரசாங்கத்தை ஜனநாயகப்படுத்துவதாலும் தற்போதைய பிரச்சினை தீரப்போவதில்லை. ஏனெனில் தற்போதைய நெருக்கடி அரசாங்கம் பற்றிய பிரச்சினையல்ல. அரசு பற்றிய பிரச்சினை. அனைத்து தேசிய இனங்களையும் அவர்களின் அடையாளங்களுடன் இணைத்த பன்மைத்துவ அரசொன்றை உருவாக்காமல் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது.
ஒரு நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமென்றால் முதலில் அதன் வேரை அடையாளம் கண்டு அதற்கு மருத்துவம் செய்ய முயற்சிக்க வேண்டும். தற்போதைய நெருக்கடியின் வேர் இலங்கைத் தீவின் சமூகக் கட்டமைப்புக்கு ஏற்ப பன்மைத்துவ அரசை உருவாக்கம் செய்யாமல் “சிங்கள பௌத்தம்” என்கின்ற ஒற்றைப் பரிமாண அரசை உருவாக்கியமையே!
30 வருட போர் அதனாலேயே ஏற்பட்டது. இந்த மூலப் பிரச்சினைக்கு மருத்துவம் செய்யாமல் அதன் பக்கவிளைவுகளுக்கே மருத்துவம் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
இன்று நெருக்கடி காரணமாக சிங்கள தேசம் போராட்டத்தை நடாத்துகின்றது. தமிழ்த் தேசம் மௌனமாக வேடிக்கை பார்க்கின்றது. இலங்கைத் தீவு சமூகமளவில் இரண்டாகப் பிளவுபட்டு இருக்கின்றது என்பதற்கு மிகப் பெரிய சான்று இதுதான். கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை என பல கடற்படை முகாம்கள் இருக்கும்போது ராஜபக்சாக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு திருகோணமலை கடற்படை முகாமையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதுவும் இரண்டு தேசங்களை அடையாளப்படுத்துகின்றது.
ஒரு யாப்பு திருத்தத்தை சிங்கள மக்களின் நிலை நின்று பார்ப்பதற்கும் தமிழ் மக்களின் நிலை நின்று பார்ப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. இலங்கை பிளவுண்ட நாடாக இருப்பதனால் பொது நிலை நின்று பார்த்தல் என்பது இலங்கைக்கு பொருந்தாது. சிங்கள மக்களின் நிலைநின்று பார்க்கும் போது 21வது திருத்தம் அரச அதிகாரக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதாக இருக்கும்.
அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் பரந்து இருப்பது ஜனநாயகத்தின் வெளிப்பாடுகளே. ஒரு தனி நபரிடம் அதிகாரங்கள் இருக்கும் போது அது எல்லையை மீறிச் செல்லாமலிருக்க தடைகள், சமநிலைகள் கோட்பாடு அவசியமே! அமெரிக்க அரசாங்க முறையில் அது பின்பற்றப்படுகின்றது. அங்கு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராக உள்ள போதும் அவரது அதிகாரத்திற்கு பல மட்டுப்பாடுகள் உள்ளன. அவர் உயர் நியமனங்களையும் வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளும் போது செனற்சபையின் சம்மதத்தைப் பெறுவது அவசியமாகும்.
தடைகள், சமநிலைகள் கோட்பாடு ஒரு துறைக்கு மட்டும் பின்பற்றுவதால் ஜனநாயகத்தை சீராக பேண முடியாது. சட்டத்துறைஇ நிர்வாகத்துறைஇ நீதித்துறை ஆகிய மூன்றிற்கும் இது அவசியம். அமெரிக்காவில் சட்டத்துறையை ஜனாதிபதி கட்டுப்படுத்துகின்றார்.
சட்டத்துறையினால் இயற்றப்படும் சட்டங்கள் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு பின்னரே சட்ட அந்தஸ்தினைப் பெறுகின்றன. அதனை மீறவேண்டுமாயின் சட்டத்துறையின் 2/3 பெரும்பான்மை அவசியம்.
அதேவேளை நீதித்துறையும் சட்ட மீளாய்வு அதிகாரம் மூலம் சட்டத்துறையைக் கட்டுப்படுத்துகின்றது. இதேபோல உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானத்திற்கு சட்டத்துறையின் ஒப்புதல் அவசியம். இங்கு தடைகள் சமநிலைக் கோட்பாடு என்பது அரசின் மூன்று துறைகளில் ஒன்று தனது அதிகார எல்லையை மீறிச் செயற்படும் போது மீதி இரண்டு துறைகளும் தலையிட்டு அதனைத் தடுப்பதேயாகும்.
21வது திருத்தம் ஜனபதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றது. சட்டத்துறையினதும், நீதித்துறையினதும் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் கவனம் எதனையும் செலுத்தவில்லை. தடைகள், சமநிலைகள் கோட்பாட்டு மற்றைய இரு துறைகளிலும் பின்பற்றப்படவில்லை எனக் கூறலாம். இதுவும் ஆபத்தானது.
சிங்களப் பெரும்பான்மை ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கி முன்னைய பாராளுமன்ற முறைமையை மீளக் கொண்டுவருவதிலேயே கவனம் செலுத்துகின்றது. முழுமையான பாராளுமன்ற முறை 1972ம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பின் மூலம் உச்ச வகையில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
அது தோல்வியில் முடிந்தமையினால் தான் ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
20வது திருத்தத்தின்படி ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மட்டுப்பாடு இருக்கவில்லையோ அதேபோல முழுமையான பாராளுமன்ற முறையில் பாராளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும் கட்டுப்பாடு இருக்கவில்லை. இங்கே ஜனாதிபதியின் சர்வாதிகாரம் இருப்பது போல அங்கே அமைச்சரவையின் சர்வாதிகாரம் இருக்கிறது எனலாம். தனிநபரிடம் இருந்த சர்வாதிகாரத்தை ஒரு குழுவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும், கட்சியின் தலைமையும் பிரதமரிடம் இருக்குமாக இருந்தால் அவரும் ஒரு சர்வாதிகாரிபோலவே தொழிற்படுவார். எனவே எந்த அரசாங்க முறையாக இருந்தாலும் கடிவாளங்கள் அவசியம்.
ஜனாதிபதி முறைமையில் சில பிடிகள் இருப்பதனால் முஸ்லீம் மக்களும், மலையக மக்களும் ஜனாதிபதி முறைமை முழுமையாக நீங்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி அனைத்து மக்களினாலும் தெரிவு செய்யப்படுகின்ற ஒருவராக இருப்பதே!
தமிழ் மக்களின் நிலை வேறு வகைப்பட்டது. ஜனாதிபதி முறைமையோஇ பாராளுமன்ற முறைமையோ அல்ல தமிழ் மக்களின் பிரச்சினை. இனங்களுக்கிடையேயான ஜனநாயகத்திற்கு வடிவம் கொடுத்தல் தான் அவர்களுடைய பிரச்சினை. தமிழ் மக்களின் நிலை நின்று பார்க்கும்போது 21வது திருத்தத்தை அவர்களால் ஏற்க முடியாது ஏனெனில் அங்கே அதிகாரம் கைமாற்றப்படுகின்ற அமைச்சரவை, அரசியலமைப்புப்பேரவைஇ சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆகிய மூன்றிலும் பெரும்தேசிய ஆதிக்கமே மேலோங்கி நிற்கும். இது எண்ணெய்ச் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் நிலைதான் தமிழ் மக்களுக்கு உருவாகும்.
தமிழ் மக்கள் 21வது திருத்தத்தை ஏற்கெனவே வேண்டுமானால் அம் மூன்று நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலாவது தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பிரதிநிதித்துவமும்இ அதிகாரங்களும் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
தமிழ் மக்களில் சில அரசியல் வாதிகள் ஜனாதிபதி முறை நீக்கப்பட்டால் மாகாணசபையில் ஆளுநரின் அதிகாரம் இல்லாமல் போகும் என்கின்ற சுத்துமாத்து கதைகளையெல்லாம் கூற முற்படுகின்றனர். சுமந்திரன் இதில் முன்னணியில் நிற்கின்றார். அது சுத்தப் பொய்யாகும். ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றதே தவிர இங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. தவிர முழுமையாக நீக்கப்பட்டாலும் ஆளுநர் பெயரளவு ஜனாதிபதியூடாக பிரதமரின் பிரதிநிதியாக விளங்குவார். இந்திய மாநில முறைமையில் அங்கு பாராளுமன்ற முறைமை பின்பற்றப்படுகின்றபோதும் ஆளுநர் அதிகாரமுடையவராக விளங்குகின்றார். ஜனாதிபதியின் பிரதிநிதி எனக் காட்டப்பட்டபோதும் உண்மையில் அவர் பிரதமரின் பிரதிநிதியாக உள்ளார்.