தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் அரிசி நிவாரண பொருட்கள் பொதி செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை ஏற்கனவே சென்னையில் இருந்து அனுப்பியது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் புதுக்கோட்டை, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை சிவகங்கை, மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகள் மூலம் தூத்துக்குடி குடோனுக்கு வரவழைக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பும் நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி துறைமுகம் அருகில் உள்ள குடோன்களில் ஆய்வு செய்தார்.
இதில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட 7 ஆயிரத்து 500 டன் அரிசியுடன் சேர்த்து தூத்துக்குடியிலிருந்து 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி என மொத்தம் இந்திய பெறுமதியில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசிகள், 28 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் மா ஆகிய பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பொருட்கள் துறைமுகம் வழியாக விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.