
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.




நாவலர் கலாசார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு வடமாகாண சபையின்
அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானமும், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனும் மலர்மாலை அணிவித்தனர்.
ஈகைச்சுடரை ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் உறவினரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,
செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெற்றது.
நூலை யாழ் ஊடக அமையத்தின் செயலாளர் நிதர்ஷன், ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் குடும்பத்தினருக்கு சமர்ப்பணம் செய்தார்.
அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப் பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்,ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியாக ஊடகவியலாளர்களது தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆவணப்பட காட்சிப்படுத்தலும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் கரவெட்டியில் பிறந்த மூத்த ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் 2005ம் ஆண்டின் மே 31ம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.