சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்:தயா கமகே

மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்று மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் நேற்று மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

மக்கள் வங்கியில் இருந்து நான் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி குற்றம் சாட்டியிருந்தார். அவர் இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன் பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பது போல் ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து நான் கடன் பெற்றதில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன். தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் நான் எடுத்ததாக கூறிய அந்த கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.அதற்காக என்னை இவ்வாறு அவர் கூற முடியாதல்லவா.இதற்காக உரிய நடவடிக்கை அவருக்கு எதிராக எடுக்கப்படும் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.என்னை திருடர் என தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews