11 வயதான சிறுமியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி S.M.ரிபாஸ்தீன் தனது முகப்புத்தகத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் உள்ளதாவது..
அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயதான சிறுமியொருவர் தனது குடும்பத்துடன் கடந்த 23 ஆம் திகதி கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால், ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக்கொண்டிருந்த 11 வயதான சிறுமியை சகோதரியின் பாதுகாப்பிற்காக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
தனது சகோதரியை வீட்டில் விட்டுவிட்டு 11 வயதான சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அதன்போது, இரவு 10.30 இருக்கும். கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி இடைவழியில் இருவரால் இடைமறிக்கப்பட்டு வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள வீட்டிற்கு தூக்கிச்செல்லப்பட்டுள்ளார்.
அங்கு ஒருவர் வௌியில் காவல் இருக்க மற்றையவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்குள் ஒருவர் உள்வரும் சத்தம் கேட்டு அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என்று கூறி மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டுள்ளனர்.
இது தற்சமயம் எனது கண்காணிப்பின் கீழ் விசாரணை மற்றும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள ஒரு குழந்தையின் கதை என குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் 11 வயதான சிறுமியின் உறவுக்காரர்கள். எனவும், ஒலுவில் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதான இரண்டு இளைஞர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.