
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுமார் 520 மாணவர்கள் நிகழ்நிலையில் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா புதுமுக மாணவர்களை வரவேற்று, வாழ்த்துரை வழங்கினார். முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கணக்கியல், மனித வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், வணிகம், நிதி முகாமைத்துவம் மற்றும் சுற்றுலாவும் விருந்தோம்பலும் அலகு ஆகியவற்றின் தலைவர்கள் தத்தமது துறைகளின் கற்கை நெறிகள் பற்றி மாவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பல்கலைக்கழகத்தின் நூலகர், நலச்சேவைகள் பணிப்பாளர், உதவிப் பதிவாளர், மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு பல்கலைக்கழக நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.









