நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர். இதனூடாக இவர்கள் கூற வந்த செய்தி முழுமையான ஜனாதிபதி முறை நீக்கத்திற்கு நாம் தயாராக இல்லை என்பதே! பெருந்தேசியவாத இனவாதப்பிரிவின் பொதுக்கருத்தும் இது தான்.
தென்னிலங்கையின் பொதுவான அரசியல் போக்கு பெருந்தேசியவாதம் தான்.
தென்னிலங்கையின் அரசியல் போக்கைப் புரிந்து கொள்வதற்கு பீடாதிபதிகளின் கருத்து அதிகம் உதவக் கூடியதாக இருக்கும். தென்னிலங்கையின் பொதுவான அரசியல் போக்கு பெருந்தேசியவாதம் தான். இதற்கு அங்குள்ள எந்த அரசியல் கட்சியோ பொது அமைப்புக்களோ புலமையாளர்களோ விதிவிலக்காக இல்லை. மிகச் சிறிய குழுக்களும் சில தனி நபர்களுமே விதிவிலக்காக உள்ளனர். அவர்கள் எந்த வகையிலும் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் அல்லர்.
பச்சை அணி பெரும் தேசியவாதத்தில் லிபரல் முகத்தைக் கொண்டது. இதற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலகம் சார்ந்த அரசசாரா அமைப்புக்கள் என்பன அடங்குகின்றன.
பெரும் தேசியவாதத்தின் இனவாத அணிக்குள் பொதுஜன முன்னணி சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சுதந்திர முன்னணி ஜே.வி.பி முன்னிலை சோசலிசக் கட்சி போன்றன அடங்குகின்றன. மேற்குலகம் லிபரல் அணியுடனேயே நிற்கின்றது. சீனா இனவாத அணியுடனேயே அதிகளவில் அடையாளம் காட்டுகின்றது. இந்தியா இரண்டு அணியிலிருந்தும் சமதூரத்தில் நிற்கின்றது என்று கூறிக்கொண்டாலும் தற்போது இனவாத அணியுடனேயே அதிகம் சாய்ந்துள்ளது. இந்துப் பெரும்தேசியவாத கருத்து நிலையை இந்தியா கொண்டிருப்பதால் அதிகம் சாயக்கூடிய தரப்பாக இனவாத அணியே உள்ளது.
சீனாவின் செல்வாக்கை அகற்றுவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம்
சீனாவின் செல்வாக்கை அகற்றுவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தடன் இந்தியா கூட்டுச் சேர்ந்திருப்பதால் தனது சாய்வு நிலையை சற்று அடக்கி வாசிக்கின்றது. லிபரல் அணி மேல் நிலைக்கு வருவதை இந்திய வரலாற்று ரீதியாக விரும்பியிருக்கவில்லை. அந்த அணி மேற்குலகத்துடன் அதிகம் சார்ந்திருப்பதே அதற்கான காரணமாகும். தவிர லிபரல் அணியினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது கடினம் எனவும் அது கருதியிருக்கலாம்.
மேற்குலகம் சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவதில் தான் அதிக அக்கறை செலுத்துகின்றது. இந்தச் செயற்பாட்டிற்கு தமிழ்த்தேசியவாதம் தடையாக இருக்கும் என்பதால் தமிழ்க்கட்சிகளை நிபந்தனைகளை விதிக்காது லிபரல் முகத்துடன் இணைத்து செயலாற்றும் படி வற்புறுத்தியது.2015ம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் நிபந்தனையில்லா இணக்க அரசியல் தமிழ்த் தேசியக்கட்சிகள் முன்னெடுத்தமைக்கு மேற்குலகின் அழுத்தமே பிரதான காரணமாகும்.
ஆனால் மேற்குலகத்தின் விருப்பத்திற்கு மாறாக தமிழ்த்தேசியவாதம் வளர்ச்சியடைந்தமையினால் பாராளுமன்றத் தேர்தலில் இணக்க அரசியல் நடாத்திய கூட்டமைப்பு கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தப் பின்னடைவு ஏதோ ஒரு வகையில் தமிழ்த் தேசியவாதத்தையும் திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்குலகிற்குக் கொடுத்துள்ளது. தவிர சிங்கள தேசத்தை மட்டும் ஜனநாயகப்படுத்துவதால் தாராண்மை வாதத்தின் மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் உருவாக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக அறிந்துகொண்டதால் தற்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ் முஸ்லீம் மலையக மக்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றது. இந்த மூன்று தரப்பின் நலன்களையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து மூன்று தரப்பின் நலன்களையும் பேணக்கூடிய ஒரு அரசை உருவாக்க முயற்சிக்கின்றது. இந்த நெருக்கடி அரசாங்கம் பற்றிய பிரச்சினையல்ல அரசு பற்றிய பிரச்சினை. எனவே புதிய அரசுருவாக்கத்தை மேற்குலகம் விரும்புகின்றது.
மேற்குலகம் சந்திக்கின்ற பிரதான பிரச்சினை
இந்தச் செயற்பாட்டில் மேற்குலகம் சந்திக்கின்ற பிரதான பிரச்சினை பெரும்தேசியவாதத்தின் இனவாத அணியை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது என்பது தான். இதனை கட்டுக்குள் கொண்டுவருவதாயின் இனவாத அணியின் அரசியல் தலைமையான ராஜபக்சாக்களை பலவீனப்படுத்த வேண்டும். ராஜபக்சக்களுக்கு எதிரான அலைக்கு இதுவே பிரதான காரணமாகும்.
தென்னிலங்கையின் அரசியல் உருவரைபு இதுதான். தமிழ்த்தரப்பு இந்த அரசியல் நிலையை எவ்வாறு கையாள்வது என்பதிலேயே கவனம் செலுத்துவது அவசியமானது. இந்த விவகாரத்தில் இந் இரண்டு அரசியல் நிலைப்பாடு தொடர்பாக தெளிவு அவசியம். அதில் ஒன்று இந்த நெருக்கடி விவகாரத்தில் தானும் ஒரு தரப்பு என்பதை தமிழ்த் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்தப் போட்டியின் விளையாட்டு மைதானத்தில் தானும் ஒரு தரப்பாக விளையாட வேண்டும். இதில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க முடியாது. தவிர இன்னோர் தரப்புடன் ஒட்டிக்கொண்டு அதன் நிழலில் நிற்கவும் முடியாது.
இரண்டாவது பெரும்தேசியவாதத்தின் லிபரல் அணி தமிழ் மக்களின் நட்பு அணி என்ற மாஜைக்குள் சிக்குப்படக் கூடாது. லிபரல் அணியாக இருந்தாலும் பெரும்தேசியவாத அணி என்பதை நினைவில் கொள்வது அவசியம். பெரும்தேசியவாத அணி ஒருபோதும் தமிழ் மக்களின் நண்பனாக இருக்க முடியாது.
தவிர வரலாற்று அனுபவப்படி தமிழ் அரசியலை அக ரீதியாக சிதைப்பதில். இந்த லிபரல் அணியே அதிகம் பங்காற்றியது. இது முதுகில் குத்தும் அணி இனவாத அணி நெஞ்சில் குத்தும் அணி நெஞ்சில் குத்தும் அணியை அடையாளம் காண்பது இலகுவானது.
ஆனால் முதுகில் குத்தும் அணியை இலகுவில் அடையாளம் கண்டு விட முடியாது. அது ஒரு கையை தமிழ்த் தரப்பின் தமிழ்த்தரப்பின் தோளில் போட்ட படியே மறு கையால் பொக்கற்றுக்குள் இருப்பதை திருடிக்கொள்ளும் அணி.
நல்லாட்சிக்காலத்தில் இதனை நேரடியாக தரிசிக்க முடிந்தது. கூட்டமைப்பின் தயவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே கன்னியாவிலும் முல்லைத்தீவிலும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டது. சுமந்திரனையும் செல்வம் அடைக்கலநாதனையும் மேடையில் இருத்திக் கொண்டு அவர்களின் அங்கீகாரத்துடன் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு காணிப்பத்திரத்தை வழங்கியது.
ஆயுதப் போராட்டத்தை அழித்தது இனவாத அணி என்று அனைவரும் பார்க்கின்றனர். உண்மையில் அதில் பேரழிவை செய்தது இந்த லிபரல் அணியே! இதனால் தான் விடுலைப்புலிகள் இந்த அணியை பலவீனப்படுத்துவதிலேயே அதிக அக்கறை காட்டினர்.
மட்டக்களப்பு நண்பர் ஒருவர் இரண்டு அணிகளையும் ஒன்று கொத்திக் கொல்லும் பாம்பு மற்றையதை நக்கிக் கொல்லும் பாம்பு எனச் சரியாகவே வர்ணித்தார். ஆனால் சுமந்திரன் உள்ளதற்குள் நல்லதைத் தெரியவேண்டும் என்கின்றார். நக்கிக்கொல்லும் பாம்பு எப்படி நல்லதாக இருக்கும் என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.
எனவே தற்போது மேற்கொள்ள வேண்டிய பணி தற்போதைய நெருக்கடி தரும் களத்தில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக பங்குபற்றவதற்கான ஆயுதங்களைச் செய்வதே! நோர்வேயின் சமாதானத் தூதுவர் சொல்கெய்ம் இதற்கான ஆலோசனையை முன்வைத்துள்ளார் அதில் முதலாவது தமிழ்த் தேசியவாதத் தரப்புக்கள் தங்களுக்குள் பொது முன்னணியை உருவாக்க வேண்டும். இரண்டாவது முஸ்லீம் தரப்புடனும் மலையகத் தரப்புடனும்இ சிங்கள முற்போக்குத் தரப்புடனும் ஒருங்கிணைவை உருவாக்க வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் மேற்கொண்டுவிட்டால் நெருக்கடி மைதானத்தில் பங்காளியாகி விளையாடலாம்.
21வது திருத்தமும் ஒரு விளையாட்டு மைதானமே. அதில் லிபரல் அணியும் இனவாத அணியும் விளையாடுகின்றன. ஆனால் தமிழ்த் தரப்பு மைதானப் பக்கத்தை இன்னமும் எட்டியே பார்க்கவில்லை.
இந்த நெருக்கடி மைதானத்தில் நாமும் பங்காளராக விளையாடுவது என்பது வரலாறு தந்த கட்டளை. இந்தக் கட்டளையை சரிவர நிறைவேற்றாவிட்டால் வரலாறு ஒருபோதும் தமிழ்த் தரப்பை மன்னிக்காது.