அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செவ்வி ஒன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்படும் இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம்.
கடந்த 74 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் விடுக்கும் வேண்டுகோள் அதிகார பகிர்வின் மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே.புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம், அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது பழைய அரசியலமைப்பில் புதிதாக ‘பெச்’ போடுவதாகவோ அல்லது ‘டிங்கரிங்’ செய்வதாகவோ இருக்கக்கூடாது.
அரசியலமைப்பு திருத்தம் அன்றி முழுமையான புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியமாகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீண்ட காலமாகத் தேசிய பிரச்சினையாக உருவெடுத்ததுள்ளன. புதிய அரசியலமைப்பின் மூலம் அதற்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பது அவசியம்.
போர் முடிவடைந்தவுடன் தமிழ் மக்களின் பிரச்சினையும் முடிவடைந்து விட்டது என்று நினைத்தால் அது தவறு. 1956ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் ஜனநாயக முறையில் விடுத்து வரும் வேண்டுகோளுக்கும் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் அரசியலமைப்பின் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பெரும்பான்மையானவர்கள் அதனை விரும்பவில்லை எனக் கூறிக்கொண்டு தொடர்ந்தும் அதனைத் தட்டிக் கழிக்க முடியாது. தமிழ் மக்கள் நாம் சிறுபான்மையாக இருக்கலாம். ஆனால், எமது வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும். அது தொடர்பில் பேச்சுகளை நடத்துவதற்கும் இது மிகவும் பொருத்தமான காலமாக உள்ளது.
காலிமுகத்திடலில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட தின நினைவு நிகழ்வும், போரில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்வும் கூட நடத்தப்படுகின்றது.
அதற்காக வருத்தம் தெரிவிக்கப்பட்டு முதல் தடவையாக இவ்வாறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இது மிகவும் சிறந்த விடயமாகும்.
போரில் மரணமடைந்த தமிழ் மக்களைப் போன்று போரால் மரணமடைந்த இராணுவத்தினர் தொடர்பிலும் தமிழ் மக்களாகிய நாம் எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான ஒரு நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த அடிப்படையிலேயே சுமார் எழுபத்து நான்கு ஆண்டுகள் தொடரும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். நாம் ஒன்றிணைய வேண்டும், ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றெல்லாம் நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே நாம் சிந்திக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அதற்காகப் பயன்படுத்துவது சிறந்தது என நான் நினைக்கின்றேன்.
நாடு பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள காலம் இது. இதற்கு முழுமையான தீர்வு காண வேண்டுமானால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதுபோல ‘சிஸ்டம் சேஞ்ச்’ ஒன்று அவசியம்.
அதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அது மேலும் காலதாமதமாகும் போது நெருக்கடிகளே அதிகரிக்கும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.