7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொலை….!

கொழும்பு 15ல் நேற்று மாலையும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில் வந்துள்ள இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முகத்துவாரம் பொலிசாரும்,

கொழும்பு வடக்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞர் போதைப் பொருள் வழக்கொன்றில் விளக்கமறியலில் இருந்த நிலையில் அண்மையிலேயே பிணையில் வந்திருந்ததாக பொலிசார் கூறினர்.

சிறியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் குறித்த இளைஞன் ஈடுபட்டு வந்துள்ளதாகவும்,

பாரிய அளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுவினருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் எனவும் பொலிசார் சந்தேகிக்கும் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கடந்த மே 30 ஆம் திகதி திங்கல் முதல் நேற்று 6 ஆம் திகதி திங்கட் கிழமை வரையிலான ஒரு வார காலத்துக்குள் போதைப் பொருளை மையப்படுத்திய 6 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.

இந்த சம்பவங்களில் ஆறு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். புறக்கோட்டை, பாணந்துறை, அளுத்கமை,

அஹங்கமை மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் ஏனைய துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியிருந்தன.

தங்காலை – மொரகெட்டிஆர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்றுமுன்தினம் (5) இரவு வேளையில் பதிவானது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்காலை – மொரகெட்டிஆர பகுதியில் நேற்றுமுன்தினம் (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கெப் வாகனமொன்றில் பயணித்த நபரொருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளொன்றில் வந்த நபரொருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை இந்த 6 சம்பவங்கள் தொடர்பிலும் எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதும்,

இவையணைத்தும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையப்படுத்திய சம்பவங்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews