
அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா வித்தியாலயத்தில் தக்ஷித இமேஷ் தனபால என்ற 16 வயதுடைய மாணவன் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 31 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இதனையடுத்து, தக்ஷித இமேஷ் தனபாலவின் கண்களை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
பின்னர் அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட கருவிழிகள் உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அநுராதபுரம் கிளையிலுள்ள கண் தானச் சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன்னர் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையை பெற்றுள்ளனர்.
இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் குறித்த செயலை சமூகவலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்