
உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21ஆவது திருத்தமே வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த திருத்தத்தில் 19 இற்கும் அப்பால் 19 பிளஸ் என்ற வகையில் பல திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும்.
ஆனால் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் உள்ளடக்கங்கள் என்ன என்பது எமக்கு முழுமையாகத் தெரியாது. இதனை நிறைவேற்றுவதாயின் 19 இல் உள்ள அடிப்படை ஜனநாயக உறுப்புரைகளையும் உள்வாங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தத்தினை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் செல்லும்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள திருத்தத்தினை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் இம்மாதம் 3 ஆம் வாரத்திற்குள் நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே எம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தினை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான நிலையில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த விடயத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்